விவசாயம்

வறண்ட பகுதியில் கேரட் சாகுபடி செய்து அசத்தும் தருமபுரி விவசாயி

Veeramani

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் அதிகம் சாகுபடி செய்யப்படும் கேரட்டை, தருமபுரி மாவட்டத்தில் வறண்ட பகுதியில் சாகுபடி செய்து வருவாய் ஈட்டி வருகிறார் விவசாயி ஒருவர்.

தருமபுரி மாவட்டம் குரும்பட்டி கிராமத்தில் விவசாயி சரவணன் தனது இரண்டரை ஏக்கர் நிலத்தில் புதிய பயிரை சாகுபடி செய்ய வேண்டும் என திட்டமிட்டார். இதற்காக ஓசூரிலிருந்து கேரட் விதைகளை வாங்கி வந்து 30 சென்ட் நிலத்தில் சாகுபடியை தொடங்கினார். மலைப் பகுதி சீதோஷ்ண நிலைக்கு மட்டுமே கேரட் விளைச்சல் கிடைக்கும் என நினைத்திருந்த நிலையில், சரவணனின் விடா முயற்சியால் 120 நாட்களில் கேரட் அறுவடைக்கு வந்துவிட்டது. இதனை நேரடியாக சாலையோரங்களில் கடை அமைத்து விற்பனை செய்து வருகிறார் சரவணன்.

சரவணன் வயலில் கேரட் விளைச்சலைக் கண்டு, அருகே இருக்கும் விவசாயிகள் சிலரும் தற்போது கேரட் சாகுபடியைத் தொடங்கியுள்ளனர். நேரடியாக வயலில் இருந்து அறுவடை செய்து வந்து, செடியுடன் கண்ணை கவரும் வகையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளதால், மக்களும் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

கேரட் சாகுபடிக்காக, 8ஆயிரம் ரூபாய் செலவிட்ட சரவணன், தற்போது சுமார் 50 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்டி, மற்ற விவசாயிகளுக்கும் முன்னுதாரணமாக இருந்து வருகிறார்.