விவசாயம்

புயல் மழையால் சாய்ந்துகிடக்கும் நெற்பயிர்கள் - வேதனையில் தருமபுரி விவசாயிகள்

kaleelrahman

தருமபுரி மாவட்டத்தில் நிவர் புயலால் நெற்பயிர்கள் சாய்ந்தன விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

வங்கக் கடலில் அண்மையில் உருவான நிவர் புயல் சென்னை, புதுச்சேரியை ஒட்டிய பகுதியில் கரையைக் கடந்தது. இந்த புயலின் தாக்கத்தால் சென்னை, புதுச்சேரி பகுதிகளில் பெய்த கன மழையாலும், வீசிய காற்றாலும் பெரும் சேதம் ஏற்பட்டது. புயலின் தாக்கம் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டம் வரை நீண்டது.

தருமபுரி மாவட்டத்தின் கிழக்கு எல்லையான கோட்டப்பட்டி, சிட்லிங், அரூர், கீரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகள் வரை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

ஆனால் நிவர் புயலால் தருமபுரி மாவட்டத்தில் தீவிர பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. அதேநேரம், கோட்டப்பட்டி, சிட்லிங், செலம்பை, நரிப்பள்ளி, கீரைப்பட்டி, அரூர், கொளகம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய பெய்த மழை காரணமாக வேளாண் பயிர்கள் பல இடங்களில் சேதமடைந்துள்ளது.

கடந்த 2 மாதங்களாக தருமபுரி மாவட்டத்தில் போதிய அளவில் மழை பெய்ததால் விவசாயிகள் பலரும் தங்கள் நிலங்களில் நெல் நடவு செய்து பராமரித்து வந்தனர். நெற்பயிர்கள் குலை தள்ளுவதற்கு முந்தைய நிலை, குலை தள்ளும் நிலை, கதிர் விட்ட நிலை, கொம்பு சாயும் நிலை என ஒவ்வொரு வயலில் ஒவ்வொரு விதமான வளர்ச்சி நிலையில் காணப்பட்டன.

இந்நிலையில், நிவர் புயலின்போது வீசிய காற்று மற்றும் மழையால் பல வயல்களில் நெற்பயிர்கள் தரையுடன் சாய்ந்து விட்டது. குலையுடன் உள்ள நெற்பயிர்கள் சாய்ந்து கிடப்பதால், எலிகள் எளிமையாக அழித்துவிடும், பால் பிடிக்காத பயிர்கள் அழுகிவிடும் இதுபோன்று, நெற்பயிர்கள் எந்த நிலையில் சாய்ந்து விட்டாலும் விவசாயிகள் சேதத்தை அடைந்தே தீர வேண்டும்.

இதனால் பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகளுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.