விவசாயம்

கடலூர்: கால்நடைகளுக்கு தீவனமாகும் வெண்டைக்காய் செடி - விலை வீழ்ச்சியால் நேர்ந்த அவலம்

kaleelrahman

வெண்டைக்காய் விலை வீழ்ச்சியால் விளை நிலத்திலேயே வெண்டை செடிகளை கால்நடை தீவனமாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி, பெரியவடவாடி, வடகுப்பம், எருமனுர், கார்குடல், செட்டவனம் உள்ளிட்ட கிராமங்களில் சிறு, குறு விவசாயிகள் நெல்லுக்கு போதிய விலை கிடைக்காததால் மாற்றுப்பயிரை பயிர் செய்து வருகின்றனர். இந்த நிலையில் காய்கறி பயிராக வெண்டைக்காய் சாகுபடி செய்து வரும் விவசாயிகள் கொரோனா தொற்று காரணமாக வெளிமாநில காய்கறி வியாபாரிகள் கொள்முதல் செய்யாததால் வெண்டைக்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

இந்நிலையில் சராசரியாக ஒரு கிலோ 12 ரூபாய் வரை விலை போன வெண்டைக்காய் தற்போது ஒரு கிலோ 2 ரூபாய்க்கு போகிறது. இதனால் வெண்டைக்காயை செடியிலிருந்து பறித்தால் கூலிக்கு கூட கட்டாது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். விலை வீழ்ச்சியின் காரணமாக வெண்டைக்காயை பறிக்காமல் கால்நடைகளுக்கு தீவனமாக விளைநிலத்தில் மாடுகளை கட்டி மேய்த்து வருகின்றனர் அப்பகுதி விவசாயிகள்.

காய்கறி பயிர்களுக்கு நிலையான விலை கிடைக்க தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.