விவசாயம்

மின் இணைப்பு கொடுப்பதாக அரசு அறிவித்தது அறிவிப்பாகத்தான் உள்ளது - கடலூர் விவசாயிகள் புகார்

Sinekadhara

மின் இணைப்பு கொடுப்பதாக தமிழக அரசு அறிவித்தது அறிவிப்பாக மட்டுமே உள்ளது எனவும், ஆனால் மின்வெட்டு அதிகமாக உள்ளது எனவும் கடலூர் விவசாயிகள் கூட்டத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. 

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாய குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகளும் விவசாய பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இதில் கலந்துகொண்ட விவசாயி சக்திவேல், திட்டக்குடி விருத்தாசலம் பகுதியில் விவசாயிகளை போலியான ஆவணங்கள் கொடுத்து ஏமாற்றி வருகிறார்கள். இதுகுறித்து அதிகாரியிடம் புகார் தெரிவித்தாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

குஞ்சிதபாதம் என்ற விவசாயி, உரத் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. இதனை போக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மின்வெட்டு அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இதனை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகள் கொடுக்கவேண்டிய கரும்புக்கான தொகையை இதுவரை வந்து கொடுக்கவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி கட்டணம் செலுத்தமுடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

அதேபோல் மற்றொரு விவசாயி பேசும்போது புதிதாக வந்த அரசு ஒரு லட்சம் மின் இணைப்பு கொடுக்கப்படும் என அறிவித்தனர். ஆனால் கடலூர் மாவட்டத்தை பொருத்தவரை அது வெறும் அறிவிப்பாகத்தான் உள்ளது. விவசாய நிலத்திற்கு இதுவரை மின் இணைப்பு கொடுக்கவில்லை என பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தார். மாவட்ட ஆட்சியர் இது குறித்து விசாரிக்கப்படும் என தெரிவித்தார்.

அதேபோல் விழுப்புரம் - நாகப்பட்டினம் 4 வழி தேசிய நெடுஞ்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதற்காக வீடுகள் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு முறையான இழப்பீடு வழங்காமல் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அலைக்கழிக்கிறார்கள். இது சம்பந்தமாக பல மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாவட்ட ஆட்சியரை சூழ்ந்து விவசாயிகள் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களை சமாதானம் செய்து அமர வைத்தனர்.