விவசாயம்

கடலூர்: எண்ணெய் கிணறு ஆய்வுக்கு ஓ.என்.ஜி.சி விண்ணப்பம்

Veeramani

கடலூர் மாவட்டத்தில் 5 இடங்களில் எண்ணெய் கிணறுகள் ஆய்வுக்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓ.என்.ஜி.சி விண்ணப்பித்துள்ளது. இதன்மூலம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வராத பகுதிகளை அந்நிறுவனம் குறிவைத்துள்ளது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் எண்ணெய் கிணறு அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி, குறிஞ்சிப்பாடியையொட்டி 5 இடங்களில் புதிதாக எண்ணெய் கிணறு அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் 237 பக்க அறிக்கையுடன் அந்நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

ஓ.என்.ஜி.சி நிறுவனம் கடந்த 15ஆம் தேதி விண்ணப்பித்த நிலையில் தற்போது அது தெரியவந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் எண்ணெய் கிணறுகள் ஆய்வுக்கு ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வராத பகுதிகளில் எண்ணெய் கிணறுகள் தோண்ட அந்நிறுவனம் முயற்சி செய்து வருவது இதன்மூலம் அம்பலமாகிறது. ஏற்கனவே அரியலூர் மாவட்டத்தில் 10 இடங்களில் எண்ணெய் கிணறு தோண்ட ஓ.என்.ஜி.சி நிறுவனம் அனுமதி கேட்டு காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.