விவசாயம்

வரத்து குறைவாக இருந்தும் உச்சத்தை தொட்ட பருத்தி விலை: நாமக்கல் விவசாயிகள் மகிழ்ச்சி

kaleelrahman

நாமக்கல்லில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 2000 பருத்தி மூட்டைகள் 60 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. நல்ல விலை கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரம் தோறும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இதில், நாமக்கல், புதுசத்திரம், சேந்தமங்கலம், பவித்ரம், துறையூர், கொளக்குடி முசிறி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 2000 பருத்தி முட்டைகளை விற்பனை கொண்டு வந்திருந்தனர்.

இந்த ஏலத்தில் ஆர்.சி.எச் ரகம் குவிண்டாலுக்கு ரூ.7512 முதல் ரூ.8333 வரையிலும், சுரபி ரகம் குவிண்டாலுக்கு ரூ.8011 முதல் ரூ.10260 வரையிலும் ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் 2000 மூட்டைகள் 60 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. இந்த விலையானது இதுவரை இல்லாத உச்சபட்ச விலை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரத்தை விட இந்த வாரம் குவிண்டால் ஒன்றுக்கு 2ஆயிரம் ரூபாயக்கு மேல் கூடுதலாக ஏலம் போனதாகவும், இவ்வாண்டு விளைச்சல் குறைந்த போதிலும் நல்ல விலை கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். வரத்து குறைவாக உள்ள நிலையில் தேவை அதிகமாக இருப்பதால் விலை உயர்ந்துள்ளது என்றும், தற்போது ஆந்திராவில் பருத்தி சீசன் தொடங்கி உள்ளதால் வரும் வாரங்களில் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.