விவசாயம்

விளைச்சல் குறைவு; விலை அதிகம்: மகிழ்ச்சியில் பருத்தி விவசாயிகள்

webteam

மீண்டும் பருத்தி விலை குவிண்டாலுக்கு 2 ஆயிரம் வரை விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் நாமக்கல், தா.பேட்டை, பவித்ரம், துறையூர், கொளக்குடி, முசிறி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 3850 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இந்த ஏலத்தில் ஆர்.சி.எச் ரகம் குவிண்டாலுக்கு ரூ. 9,009 முதல் ரூ. 11,899 வரையிலும், சுரபி ரகம் குவிண்டாலுக்கு ரூ.10,689 முதல் ரூ.12,169 வரையிலும், கொட்டு ரகம் குவிண்டால் 3,016 ரூபாய் முதல் 9,917 ரூபாய் வரையிலும் ஏலத்திற்கு விடப்பட்டது. ஏலத்தில் 3,850 மூட்டைகள் ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.

கடந்த வார விலையை விட இந்த வாரம் குவிண்டால் ஒன்றுக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை மீண்டும் விலை உயர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். இவ்வாண்டு விளைச்சல் குறைந்து போனாலும் நல்ல விலை கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மாசி பட்ட பருத்தி அறுவடை முடிவடையும் நிலையில் விலை தொடரவே வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.