விவசாயம்

'கொரோனா 2-ஆம் அலையிலும் நாட்டுக்கு விவசாயிகள் கைகொடுப்பர். ஆனால்...' - பொருளாதாரப் பார்வை

'கொரோனா 2-ஆம் அலையிலும் நாட்டுக்கு விவசாயிகள் கைகொடுப்பர். ஆனால்...' - பொருளாதாரப் பார்வை

Veeramani

இந்தியாவில் மிகத் தீவிரமடைந்துள்ள கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தொழில்கள் முடங்கியுள்ளன. இந்தச் சூழலில் நாட்டின் பொருளாதாரத்துக்கு கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் கைகொடுப்பார்களா விவசாயிகள் என்ற கேள்வியும் எழுகிறது.

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு தழுவிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் இந்தியாவின் அனைத்து தொழிற்சாலைகளிலும் உற்பத்தி தடைபட்டன. இதனால் இந்தியப் பொருளாதாரம் கிடுகிடுவென சரிந்து, முன்னெப்போதும் இல்லாத பாதிப்பை சந்தித்தது. அனைத்து துறைகளின் பொருளாதார வளர்ச்சியும் சரிந்தபோது, நாட்டுக்கு கை கொடுத்தது விவசாயத் துறை மட்டுமே. இதனால்தான், “கொரோனா காலத்தில் கடுமையான சவால்கள் நிலவியபோதும், நமது விவசாயிகள், விவசாயத்தில் சாதனை படைத்து உள்ளனர்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

கொரோனா முதல் அலையின் பொது முடக்கத்தின்போது தொழிற்சாலைகள் பெரும்பாலும் மூடப்பட்டிருந்த நிலையில் நாட்டின் ஜிடிபி அதளபாதாளத்தில் விழுந்தது. ஆனால் கொரோனா தாக்கத்தையும் மீறி வேளாண் துறை உற்பத்தி கிட்டதட்ட 3 சதவீத வளர்ச்சியை சாதித்தது. இந்த வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம், பருவமழை குறையாமல் பொழிந்ததே. மேலும் கொரோனாவினால் அனைத்து தொழில்களும் முடங்கினாலும் மக்களுக்கு உணவளிக்கும் விவசாயம் மற்றும் மருத்துவ துறை ஓய்வின்றி இயங்கியது.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பருவமழை பொய்க்காது என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை வெளியிட்டுள்ளது, இந்திய வானிலை ஆய்வு மையம். இதன்மூலம் கடந்த ஆண்டைப் போலவே கொரோனா பேரிடர் காலத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு விவசாயிகள் கைகொடுக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, தென்மேற்கு பருவமழை சராசரி அளவில் இருந்தால், அது விவசாயிகளுக்கு ஊக்கமாக மட்டுமின்றி, நாட்டில் குடிநீர் தட்டுப்பாடு தவிர்க்கப்படும் என்பதும் நிச்சயம்.



முக்கியமாக நாட்டில் தற்போது கொரோனா பொது முடக்கத்தால் பூட்டப்பட்டுள்ள சிறு, குறு தொழில்களை நம்பியிருந்த கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி உள்ளனர். அதுபோல நாட்டில் அதிகளவு தொழிலாளர்கள் பணியாற்றும் துறையாக வேளாண்மை துறை உள்ளது. பருவமழை நன்கு பொழிந்து இத்துறை சிறப்பாக செயல்படும் பட்சத்தில், வேளாண்மையை நம்பியிருக்கும் பல கோடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்கப்படும் என்பது உறுதி.

இது குறித்து பேசும் வேளாண் செயற்பாட்டாளர் சேதுராமன், “கொரோனா பொதுமுடக்கத்தால் பல தொழில்கள் பாதிக்கப்பட்டாலும், விவசாயத் துறை வழக்கம் போலவே இயங்குகிறது. மேலும் இந்த ஆண்டும் பருவமழை கைகொடுக்கும் என வானிலை மையம் கணித்திருப்பதால், நாடு முழுவதுமே வழக்கமான விவசாய உற்பத்தி நடைபெறும் வாய்ப்புள்ளது. எனவே கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் விவசாயத் துறைதான் நாட்டிற்கு கைகொடுக்கப்போகிறது.

ஆனால், தற்போதும் விவசாயம் பல சிக்கல்களை சந்திக்கிறது. போக்குவரத்து தடை செய்யப்பட்டிருப்பதால் விவசாய தொழிலாளர்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அழைத்து செய்வதில் சிக்கல் உள்ளது. மேட்டூர் அணையிலும் சுமார் 100 அடி தண்ணீர் உள்ளது, தென் மேற்கு பருவமழையும் பொழிய தொடங்கியுள்ளது, எனவே ஜூன் 12 வாக்கில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கவும் வாய்ப்புள்ளது. அதனால் தற்போது குடிமராமத்து பணிகளை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு செய்யவேண்டும். மேலும் உரவிலை உயரக்கூடும் என்பது போன்ற செய்திகளும் வந்துகொண்டிருக்கிறது, அதனால் உரவிலையை கட்டுக்குள் வைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சில ஆண்டுகளாக தடைபட்டுள்ள குறுவை தொகுப்பு திட்டத்தையும் அரசு மீண்டும் அறிவித்து நடைமுறைப்படுத்துவதுடன், தற்போது அறுவடை செய்துள்ள விளைபொருட்களை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கையையும் அரசு எடுக்க வேண்டும். சந்தைப்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளன, அதனால் தர்பூசணி போன்ற சீசன் பழங்கள், காய்கறிகளை அரசே கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு உதவ வேண்டும்.  பூக்கள், வாழை போன்ற பணப்பயிர்களை செய்த விவசாயிகள் பொதுமுடக்கம் மற்றும் கோயில்கள் பூட்டியுள்ளதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களுக்குமான உதவியையும் அரசு செய்யவேண்டும்.

பருவமழை நன்றாக பொழியுமென்பதால் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுமைக்குமே நல்ல வேளாண் உற்பத்தி நடக்கும். இதனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். நாடே கொரோனா போர் நெருக்கடி போன்ற சூழலில் சிக்கித்தவிக்கும்போது விவசாயிகள்தான் அரசுக்கு கைகொடுக்கின்றனர். எனவே அரசும் விவசாயிகளுக்கு உதவி செய்யவேண்டும்” என தெரிவித்தார்.

- வீரமணி சுந்தரசோழன்