விவசாயம்

கொத்தமல்லி விளைச்சல் அமோகம்: விலை வீழ்ச்சி

webteam

ஓமலூரில் கொத்தமல்லி விளைச்சல் அதிகரித்தபோதிலும், விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். 

சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி சுற்றுவட்டார கிராமங்களில் குறுகிய கால பயிர்கள் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஓமலூர், காடையாம்பட்டி தோட்டக்கலை துறை அதிகாரிகள், விவசாயிகளுக்கு விவசாயத்தில் கூடுதல் வருவாய் ஈட்டும் வகையிலான பயிர்கள் சாகுபடி செய்வதற்கான உதவிகள் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். வழக்கமாக காடையாம்பட்டி வட்டாரத்தில் கொத்தமல்லி அதிகமாக சாகுபடி செய்யப்படும். ஆனால், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பயிரிடப்பட்ட கொத்தமல்லி தொடர் மழையால் அழுகி வீணாகி விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. அதனால், கொத்தமல்லியின் விலை கிடுகிடுவென உயர்ந்து கட்டு 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

இந்தநிலையில், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கொத்தமல்லி விவசாயிகளுக்கு நேரடி கள ஆய்வு செய்து மானாவாரியாகவும் தண்ணீர் தேங்காத நிலங்களிலும் சாகுபடி செய்ய தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கினர். அதனால், தற்போது தண்ணீர் தேங்காத மேட்டு நிலங்களில், சாகுபடி செய்திருந்த கொத்தமல்லி நன்கு வளர்ந்து நல்ல விளைச்சலை கொடுத்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது ஒருசில தோட்டங்களில் விவசாயிகள் அறுவடை பணிகளை துவங்கியுள்ளனர். மேலும், பல்வேறு கிராமங்களிலும் கொத்தமல்லி சாகுபடி அதிகரித்துள்ளது. அதனால், கொத்தமல்லியின் விலை அதிரடியாக குறைந்து கொண்டே வருகிறது. கடந்த பத்து நாட்களுக்கு முன்பு வரை ஒரு கொத்தமல்லி 50 ரூபாய் வரை விற்பனையாகி வந்தது.

ஆனால் தற்போது கிடுகிடுவென விலை குறைந்து ஒரு கட்டு 10 ரூபாய் என்ற அளவில் விற்பனையாகிறது. சில்லரையாக 15 முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்யபடுகிறது. மழையிலும் சிறப்பாக பராமரித்து பாதுகாத்து விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் விலை வெகுவாக குறைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அதனால், விலை மேலும் குறைவதற்குள் விரைவாக அறுவடை செய்து, சேலம் மாவட்டம் முழுவதும் அனுப்பி வைக்கின்றனர். அதேபோல ஈரோடு, கோவை, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கும் அனுப்பி வருகின்றனர்.