விவசாயம்

கோவை: பூண்டு வரத்து அதிகரிப்பால் விலை குறைவு; விவசாயிகள் ஏமாற்றம்

kaleelrahman

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் மண்டிகளுக்கு பூண்டு வரத்து அதிகரித்துள்ளதால் அதன் விலை சரிந்துள்ளது. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மேட்டுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் வெள்ளைப் பூண்டு மண்டிகளுக்கு நீலகிரி மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும், பூண்டுகள் டன் கணக்கில் கொண்டு வரப்படுவது வழக்கம். இங்கு தரம் பிரிக்கப்படும் பூண்டு ரகங்கள் ஏலம் மூலம் விலை நிர்ணயிக்கப்பட்டு மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படும்.

தற்போது நீலகிரியில் பூண்டு சீசன் துவங்கியுள்ள நிலையில் அங்கிருந்து வரும் மலைப்பூண்டின் வரத்து உயர்ந்துள்ளது. கடந்த வாரம் 12,000 மூட்டை பூண்டு வரத்து இருந்த நிலையில் அதன் விலை கிலோ 120 ரூபாய் முதல் 240 வரை விற்பனையானது. இதையடுத்து வரத்து அதிகமானதால் இந்த வாரத்தில் 35,000 மூட்டை பூண்டு வந்துள்ளதால் இதன் விலை சரிந்துள்ளது.

தற்போது ஒரு கிலோ பூண்டின் விலை ரூபாய் 60 முதல் 140 வரையே விலை போகிறது. இந்த விலை வீழ்ச்சியால் பூண்டு விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.