விவசாயம்

ஊக்குவிப்பு இல்லை: கவலையில் காபி விவசாயிகள்

ஊக்குவிப்பு இல்லை: கவலையில் காபி விவசாயிகள்

webteam

நீலகிரி மாவட்டத்தில் இயற்கை முறை காபி சாகுபடிக்கு ஊக்குவிப்பு இல்லாததால், மலை மாவட்ட விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். 

நீலகிரி மாவட்டத்தில், குந்தா, கூடலுார், பந்தலுார், பகுதிகளில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்படுகிறது. அந்தச் செடிகளுக்கு நடுவே, சுமார் 10 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் காபி, ஊடு பயிராக உள்ளது. தேயிலைக்கு விலை கிடைக்காததால் 50 சதவீதம் விவசாயிகள், காபி சாகுபடி மேற்கொள்ள முன் வந்தனர். போதிய விழிப்புணர்வு இல்லாததால், காபி சாகுபடியில் தொய்வு ஏற்பட்டது.

இயற்கை விவசாயத்துக்கு ஏற்றப் பயிர்களில் காபியும் ஒன்று. இதற்கு வெயில், நிழல் வேண்டும். மலைசவுக்கு என்று சொல்லப்படும் சில்வர் ஓக் மரத்தின் அடியில் காபியை சாகுபடி செய்யும் போது, காபிக்கு தேவையான நிழல் கிடைப்பதோடு, சில்வர் ஓக் மரங்களில் இருந்து உதிரும் இலைகள் மூலம் தேவையான இயற்கை உரம் கிடைக்கிறது. 

காபி தோட்டத்தில் காலியாக உள்ள இடங்களில் கொளுஞ்சி, கொள்ளு, தட்டைப்பயறு, போன்றவற்றை விதைத்து விடலாம். கூடுதல் வருமானமும் கிடைக்கிறது. இது போன்ற அறிவுரைகளை வழங்குவது தோட்ட கலைத்துறையினரின் கடமையாகும். ஆனால், 'அதிகாரிகள் பெயரளவுக்கு நடத்தும் விழிப்புணர்வால் போதிய ஊக்கம் இல்லை' என, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். 

காபிக்கு கிலோவுக்கு 150 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 200 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. நீலகிரி மாவட்டத்தை பொறுத்த வரையில் பல ஏக்கர் தேயிலை தோட்டத்தில் காபி பயிரை ஊடுபயிராக விளைவிக்க விவசாயிகள் மத்தியில் ஆர்வம் உள்ளது. ஆனால், சம்மந்தப்பட்ட துறையினர் போதிய ஊக்கம் தரவேண்டும் என்று விவசாயிகளின் எதிர்பார்க்கின்றனர்.