விவசாயம்

செங்கல்பட்டு: சூறைக் காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை - முறிந்து விழுந்த மாமரங்கள்

kaleelrahman

செங்கல்பட்டு அருகே சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழையால் 50-க்கும் மேற்பட்ட மாமரங்கள் முறிந்து விழுந்தன.

தமிழகத்தில் கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் வங்கக் கடலில் புதிதாக உருவாகியிருக்கும் அசானி புயல் காரணமாக தமிழகத்தில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் பலத்த சூறைக் காற்றுடன் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் மரங்கள் முறிந்து விழுந்தும், மின்கம்பங்கள் சாய்ந்ததால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பகுதியில் நாராயணமூர்த்தி என்பவர் தோட்டப்பயிர் விவசாயம் செய்து வருகிறார். நேற்றிரவு பெய்த பேய்மழையால் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாமரங்கள் முறிந்து விழுந்தன. தற்போது மாம்பழங்கள் காய்க்க துவங்கி உள்ள நிலையில் மாங்காய்கள் அனைத்தும் மரத்தில் இருந்து கொட்டி விட்டன.

இதனால் சுமார் 4-லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயி நாராயணமூர்த்தி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அரசு சார்பில் இழப்பீடு வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.