விவசாயம்

மின்கம்பம் உரசியதில் தீப்பிடித்து எரிந்த தோட்டம்... சுமார் 2,000 வாழை மரங்கள் சேதம்!

webteam

மின்கம்பம் உரசியதில் தீப்பிடித்து இரண்டு ஏக்கர் பரப்பில் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளது.

தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் உயர் மின் அழுத்த மின் கம்பி உரசியதில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏக்கர் பரப்பிலான வாழை மரங்கள் எரிந்து சேதமடைந்தன. தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் காளை. இவர் கூடலூர் பகுதியில் இரண்டு ஏக்கர் பரப்பில் சுமார் 2,000 வாழை மரங்கள் பயிர் செய்துள்ளார். 

இந்நிலையில் வாழை தோட்டத்தின் மேல் சென்ற மின் உயர் அழுத்த கம்பி, வாழை மரத்தின் மேல் உரசியுள்ளது. இதில் வாழை மரங்களில் சட்டென தீப்பற்றியது. சில நிமிடங்களிலேயே தீயானது வாழைத்தோட்டம் முழுவதும் காற்றுக்கு பரவி எரிந்தது. தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கம்பம் தீயணைப்புத் துறையினர், சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் பல இடங்களில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

இந்தத் தீ விபத்தால் சுமார் இரண்டாயிரம் வாழை மரங்கள் எரிந்து சேதமடைந்ததது. இதில் வெட்டும் தருவாயில்  இருந்த  ஆயிரத்திற்கும் அதிகமான செவ்வாழை மரங்கள்  வாழைதார்களுடன் எரிந்து நாசமடைந்ததால் விவசாயி சுரேஷ் அதிர்ச்சியில் உள்ளார்.

விபத்து குறித்து கூடலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.