விவசாயம்

நெருங்கும் ஓணம் பண்டிகை: விலையுயர்ந்து நேந்திரன் வாழை – மகிழ்ச்சியில் விவசாயிகள்

webteam

ஓணம் பண்டிகை நெருங்கும் நிலையில் கூடலூரில் விளையும் நேந்திரன் வாழைக் காய்களுக்கு விலை அதிகரித்து இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூரில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் நேந்திரன் வாழை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளையும் நேந்திரன் வாழைக் காய்கள் அதிக அளவில் கேரளாவிற்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. இதனால் அதற்கான விலையையும் கேரள சந்தைகளில் நிர்ணயம் செய்யப்படுகின்றன.

இந்த நிலையில் அடுத்த மாதம் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், நேந்திரன் வாழைக்காய் விலை அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. ஓணம் பண்டிகையில் நேந்திரன் வாழையால் செய்யப்பட்ட உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இதனால் கேரளாவில் நேந்திரன் வாழை காய்களுக்கான தேவையும் அதிகரித்து இருக்கிறது.

இன்றைய நிலவரப்படி நேந்திரன் விலை கிலோவிற்கு 45 ரூபாய் கிடைக்கிறது. இந்த விலையுயர்வு காரணமாக கூடலூர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளன.