விவசாயம்

விவசாயி அவமானப்படுத்தபட்ட விவகாரம்: "தனிநபர் கண்ணியம் முக்கியம்"என ஆனந்த் மஹிந்திரா ட்வீட்

Veeramani

கர்நாடகாவில் கார் வாங்க மஹிந்திரா ஷோரூமுக்குச் சென்ற விவசாயியை கேலி செய்து விற்பனையாளர் அவமானப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து தனிநபர் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்று மஹிந்திரா நிறுவனங்களின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார்.

இது குறித்து ட்வீட் செய்துள்ள ஆனந்த் மஹிந்திரா, "@MahindraRise இன் முக்கிய நோக்கம், நமது சமூகங்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களையும் எழுச்சி பெறச் செய்வதே ஆகும். மேலும் எங்களின் முக்கிய மதிப்பு என்பது தனிநபரின் கண்ணியத்தை நிலைநிறுத்துவதாகும். இந்த தத்துவத்தில் ஏதேனும் பிறழ்வு ஏற்பட்டால், அது மிகவும் அவசரமாக கவனிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக மஹிந்திரா மற்றும் மஹிந்திரா தலைமை நிர்வாக அதிகாரி வீஜய் நக்ராவின் ட்வீட்டில், "இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், எங்களின் ஊழியர்களுக்கு ஆலோசனை மற்றும் பயிற்சி வழங்கப்படும் "என உறுதியளித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று கர்நாடகாவின் துமகுருவில் உள்ள மஹிந்திரா ஷோரூமிற்கு விவசாயியான கெம்பேகவுடா, பொலிரோ பிக்-அப் கார் வாங்கச் சென்றிருந்தபோது, விற்பனையாளர் அவரிடம், "கார் மதிப்பு 10 லட்சம் ரூபாய் , உன் பாக்கெட்டில் 10 ரூபாய் கூட இருக்காது" எனக் கூறி அவமானப்படுத்தியதாக அந்த விவசாயி மற்றும் அவரது நண்பர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.

இதனால் ஷோரூம் பணியாளர்கள் மற்றும் விவசாயியின் இடையே வாக்குவாதம் மூண்டது. இதன்பின் ஒரு மணி நேரத்திற்குள் பணத்தைக் கொண்டு வருவதாக சவால் விட்டுவிட்டு சென்ற கெம்பேகவுடா, சினிமா பாணியில் ஒரே மணி நேரத்தில் மொத்த பணத்தையும் கொண்டுவந்து, அதே நாளில் காரை டெலிவரி செய்யும்படி விற்பனையாளரிடம் கேட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த விற்பனை நிர்வாகி, காரை டெலிவரி செய்ய நான்கு நாட்களுக்கு மேல் ஆகும் எனத் தெரிவித்ததால், ஆத்திரமடைந்த கெம்பேகவுடாவும் அவரது நண்பர்களும் விற்பனையாளரின் செயலுக்கு மன்னிப்புக் கோரி வாக்குவாதம் செய்தனர். விற்பனை அதிகாரி இறுதியாக கெம்பேகவுடாவிடம் மன்னிப்புக் கேட்டார். அதன்பின்னர் உங்கள் ஷோரூமில் நான் கார் வாங்க விரும்பவில்லை என்று அவர் தனது ரூ.10 லட்சத்துடன் சென்று விட்டார்.

இந்த சம்பவத்தின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையில், மஹிந்திரா குழுமத் தலைவரான ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் இதுகுறித்து தற்போது பதிவிட்டுள்ளார்.