விவசாயம்

பெரம்பலூர்: தொடர் மழையால் 1,500 ஏக்கர் சின்ன வெங்காயப் பயிர்கள் நாசம் - விவசாயிகள் வேதனை

JustinDurai
பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவிலான சின்ன வெங்காயப் பயிர்கள் பாதிப்படைந்துள்ளன. பட்டறையில் பாதுகாத்து வைத்திருந்த வெங்காயங்களும் முளைக்கத் தொடங்கிவிட்டதால் விவசாயிகள் கடும் நஷ்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் 50 சதவிகித சின்ன வெங்காய தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் வருடந்தோறும் சுமார் 8 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுவது வழக்கம். ஆனால் இந்த பருவத்தில் தொடர் மழையால் சாகுபடி பரப்பு சுமார் 1,700 ஹெக்டேர் என்றளவில் சுருங்கிப் போனது. இந்த நிலையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி சின்ன வெங்காயப் பயிர்கள் அழுகத் தொடங்கியுள்ளன. இதனால் சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் அறுவடை செய்த வெங்காயமும் காயவைக்க முடியாததால் வயல்களிலேயே விவசாயிகள் வைத்துவிட அவையும் முளைக்க தொடங்கியுள்ளது.
இதே போல் விற்பனைக்காகவும், விதைக்காகவும் பட்டறையில் பாதுகாத்து வைத்திருந்த சின்ன வெங்காயமும் முளைக்கத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் கடும் நஷ்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அடுத்த பருவத்திற்கு விதைக்கு கூட வெங்காயம் இருப்பு இல்லாமல் கையறு நிலையில் நிற்கின்றனர் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள். பயிர் பாதிப்பு காரணமாக வரும் நாட்களில் சின்ன வெங்காயத்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டு அவற்றின் விலை உயரும் வாய்ப்புள்ளதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். எனவே அதிகாரிகள் சேதமடைந்த சின்ன வெங்காய பயிர்களை மதிப்பீடு செய்து இழப்பீடு கிடைக்கப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.