5 மாவட்டங்களில் தொழில் கற்கும் மையங்கள் உருவாக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை வரலாற்றில், முதல் முறையாக வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் தாக்கலாகியுள்ளது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், வேளாண் துறைக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரியில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக தோட்டக்கலைக்கல்லூரி அமைக்கப்படும் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நாகப்பட்டினம், ஈரோடு, கோயம்புத்தூர், திருச்சி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் தொழில் கற்கும் மையங்கள் ஏற்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் 100 ஏக்கரில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள வியாபாரிகளை விவசாயிகளுடன் இணைப்பு ஏற்படுத்த ரூ.10 கோடியில் மின்னணு ஏல முறை அறிமுகப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.