விவசாயம்

திருவாரூர்: தொடர்ந்து பெய்யும் கனமழையால் 20,000 ஏக்கர் சம்பா சாகுபடி பாதிப்பு

Sinekadhara

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக பெய்த கனமழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான சம்பா சாகுபடி நெல் பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. 

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மழை விட்டுவிட்டு தொடர்ந்து பெய்து வருவதால், மாவட்டம் முழுவதும் தினசரி அதிகபட்சம் 5 முதல் 6 சென்டிமீட்டர் வரை சராசரியாக மழை பெய்துவருகிறது. நேற்று திருவாரூரில் 8 சென்டிமீட்டர் மழை பெய்தது. நேற்று முன்தினம் நன்னிலத்தில் 12 சென்டிமீட்டர் மழை பெய்தது.இவ்வாறு தொடர்ந்து மழை பெய்துவருவதால் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தாழ்வானப் பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதனை மாவட்ட நிர்வாகம் அப்புறப்படுத்தி வருகிறது. 

மேலும் திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சாகுபடி நடந்துவருகிறது. இந்த சூழ்நிலையில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நன்னிலம், வலங்கைமான், நீடாமங்கலம், கொரடாச்சேரி, குடவாசல், உள்ளிக்கோட்டை, ஆலங்கோட்டை, மேலமணலி, மணக்கால், ஐயம்பேட்டை, கருப்பூர், நாகராஜன் கோட்டம், திருகொட்டாரக்குடி, கொத்தங்குடி, பேரளம், பாரதிமூலங்குடி, ராமானுஜம், மணலி, பூந்தாழங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சம்பா நடவுசெய்த வயல்களும் இதில் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக விதைப்பு செய்த வயல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு மூழ்கியுள்ளன.

எனவே அரசு போர்க்கால அடிப்படையில் வடிகால்களை தூர்வாரி உதவவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும், வெட்டாற்றில் வடியும் வடிகாலில் உடைப்பு ஏற்பட்டு உக்கடை என்ற பகுதியில் ஆற்றின் கரை உடைந்ததால் போக்குவரத்து தடைபட்டு முப்பத்தி இரண்டு குடும்பங்கள் வசிக்கும் பகுதி தனித்து விடப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்ல மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்துவருகிறது. மாவட்ட ஆட்சியர் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு சீரமைப்பு பணிகள் நடந்துவருகிறது. 

மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், மாவட்டத்தில் தண்ணீர் தேங்கும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீரை அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.