ICC New Rules
ICC New Rules Twitter
Cricket

இனி ஸ்டம்பில் பட்டு போனாலும் பேட்ஸ்மேனுக்கு சேரும் ரன்கள்! ICC அறிமுகம் செய்துள்ள புதிய விதிமுறைகள்!

Rishan Vengai

சவுரவ் கங்குலி தலைமையிலான ஆண்கள் கிரிக்கெட் கமிட்டி மற்றும் மகளிர் கிரிக்கெட் கமிட்டிகளின் பரிந்துரையின் பேரில், 3 புதிய விதிமுறைகளுக்கு ஐசிசியின் தலைமை நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி ஜூன் 1ஆம் தேதி முதல், ஆடும் போட்டியில் அம்பயர்களின் சாஃப்ட் சிக்னல் வழங்குவதில் மாற்றம், பீல்டர்களுக்கு கட்டாய ஹெல்மேட் மற்றும் ஃப்ரீ ஹிட் பந்துகளில் ஸ்டம்பில் பட்டு எடுக்கப்படும் ரன்கள் என தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மூன்று விதிமுறை மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அம்பயர்கள் இனி சாஃப்ட் சிக்னல் காட்ட தேவையில்லை!

களத்தில் இருக்கும் நடுவர்கள், மூன்றாவது அம்பயர் அல்லது டிவி அம்பயருக்கு ஏதாவது பரிந்துரைக்கும் போது, இனி தங்களுடைய முடிவு இதுதான் என சாஃப்ட் சிக்னலை வழங்க வேண்டியதில்லை.

Soft Signal Rule

இதற்கு முன்புவரை, ​​ஒரு முடிவை எட்டமுடியாத கேட்ச் எடுக்கப்பட்டாலோ அல்லது ரன் அவுட்டிற்காக மேல்முறையீடு செய்யப்பட்டாலோ, அதை மூன்றாம் அம்பயருக்கு கொண்டு செல்லும் கள நடுவர்கள், தங்களுடைய முடிவு இதுதான் என பரிந்துரைப்பார்கள். அதன் முடிவு எடுப்பதில் சிக்கலாக மாறும் நேரத்தில், கள நடுவரின் முடிவுக்கே, மூன்றாவது அம்பயர் செல்ல நேரிடும். இந்நிலையில் தற்போது அந்தமுறை மாற்றப்பட்டு, மூன்றாவது அம்பயர் எந்த பாரபட்சமும் இல்லாமல், தங்கள் முடிவை சுதந்திரமாக எடுக்கும் வகையில், இந்த புதிய விதிமுறை வழிவகை செய்கிறது.

சில ஃபீல்டிங் பொசிசன்களுக்கு கட்டாய ஹெல்மெட்!

பேட்ஸ்மேன்களுக்கோ, பீல்டர்களுக்கோ அல்லது விக்கெட் கீப்பர்களுக்கோ காயம் ஏற்படுவதை தடுக்கும் வகையில், 3 விதமான ஃபீல்ட் பொசிசன்களுக்கு கட்டாய ஹெல்மெட் என்பதை அறிமுகப்படுத்துகிறது ஐசிசி.

Close Field Set

அதன்படி, வேகப்பந்து வீச்சாளரை எதிர்கொள்ளும் போது பேட்ஸ்மேனும், வேகப்பந்து வீச்சாளர் பந்துவீசும் போது ஸ்டம்புக்கு அருகில் நிற்கும் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுக்கு அருகில் நிற்க வைக்கப்படும் பீல்டர்களும் கட்டாயம் ஹெல்மெட்டை அணிந்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை கொண்டுவந்துள்ளது.

ஃப்ரீ ஹிட் பந்துகளில் போல்டாகி ஓடி எடுக்கப்படும் ரன்கள், பேட்ஸ்மேன் கணக்கில் சேரும்!

கடந்த டி20 உலகக்கோப்பையில், பாகிஸ்தான் மற்றும் இந்திய அணியின் முக்கியமான மோதலின் போது, விராட் கோலி ஒரு ஃப்ரீ ஹிட் பந்தை எதிர்கொள்ள, அவர் அந்த பந்தில் போல்ட்டானாலும், ஸ்டம்பில் பட்டு பந்து செல்ல, ஓடியே 3 ரன்களை எடுக்கும் இந்திய அணி. அந்த ரன்களுக்காக நீண்ட வாக்குவாதம் செய்தனர், பாகிஸ்தான் வீரர்கள். பிறகு அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

ind vs pak

இந்நிலையில், இதைப்போன்ற இன்னொரு சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்கவே, இந்த விதிமுறை அறிமுகம் செய்யப்படுகிறது. அதன்படி, ஃப்ரீ ஹிட்டில் ஸ்டம்பில் பட்டு பந்து சென்றால், அதில் எடுக்கப்படும் ரன்கள் இனி பேட்ஸ்மேன் கணக்கிலேயே சேர்க்கப்படும். இந்த விதிமுறையானது, இனிவரும் காலங்களில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே மாறும்.