”அதானிக்கு சாதகமாக அரசு செயல்பட்டதா?”.. மவுனம் கலைத்த நிர்மலா சீதாராமன் ஆவேசம்!

”அதானிக்கு சாதகமாக அரசு செயல்பட்டதா?”.. மவுனம் கலைத்த நிர்மலா சீதாராமன் ஆவேசம்!
”அதானிக்கு சாதகமாக அரசு செயல்பட்டதா?”.. மவுனம் கலைத்த நிர்மலா சீதாராமன் ஆவேசம்!

”தொழிலதிபர் அதானிக்குச் சாதகமாக பிரதமர் மோடி அரசு செயல்படவில்லை” என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆங்கில சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், ”பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டுவரப்படும் எல்லாத் திட்டங்களுமே, பொதுவெளியில் வெளிப்படையாக டெண்டர் விடப்பட்டுத்தான் நிறைவேற்றப்படுகிறது. அதானிக்கு சாதகமாக நாங்கள் செயல்படவில்லை. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள்தான் கபட நாடகம் போடுகின்றன. ஒருபக்கம் போராட்டம் நடத்துகிறார்கள். மறுபக்கம் அவர்கள் ஆளும் மாநிலங்களில் அதே நிறுவனம் துறைமுகம் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்ற நிலம் வழங்கிவருகின்றன.

நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமாக விவாதம் நடத்தாமல், வெளியே போராட்டம் நடத்தியும், தவறான கருத்துகளையும் முன்வைத்து வருகின்றனர். நாங்கள் இந்த விவகாரத்தில் எதையும் மூடிமறைக்கவில்லை. அவைக்குள்ளே வாருங்கள். ஆக்கப்பூர்வமாக விவாதிக்கலாம். பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் இருப்பது இயல்புதான். நாட்டின் பொருளாதாரக் கொள்கை மிகவும் வலுவாகவே இருக்கிறது. இதனால் அதற்கு எந்தப் பாதிப்பும் இல்லை“ என அதில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கப் புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், கடந்த மாதம் 24ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையால், அதானி குழுமம் தொடர் வீழ்ச்சிகளைச் சந்தித்து வருகிறது. அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றன. இந்தச் சூழலில்தான் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதானி விவகாரம் குறித்து பதிலளித்துள்ளார்.

அதானி விவகாரம்: நாடாளுமன்றத்தை முடக்கும் எதிர்க்கட்சிகள்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் , எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் முடக்கப்பட்டு வருகிறது . அதானி விவகாரம் தொடர்பாக ஹிண்டன்பெர்க் அறிக்கை மற்றும் அதானி குடும்பத்தின் மீது மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் முதலீடு உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கூறி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர்.

நாடாளுமன்ற கூட்டு நிலைக்குழு விசாரணை அமைக்கப்பட்டு அதானி விவகாரம் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் சார்பில் வழங்கப்பட்டுள்ள ஒத்திவைப்பு தீர்மான கடிதம் மீது மத்திய அரசு விவாதம் நடத்த வேண்டும் என்றும், அதானி விவகாரத்தில் உரிய விளக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் அளித்த பிறகு குடியரசுத் தலைவர் உரை மீதான உரை மீதான விவாதத்தில் ஈடுபட தயாராக இருப்பதாகவும் கூறினார்.

குடியரசு தலைவர் உரை மீதான விவாதங்களை காட்டிலும் அதானி குழும விவகாரத்தில் பிரதமர் முதலில் பதில் அளிக்க வேண்டும், அதேவேளையில் குடியரசு தலைவரின் உரை மீதான முக்கியத்துவத்தை கொடுத்து வருகிறோம். மேலும், மத்திய அரசு இந்த விவகாரத்தை கையில் எடுக்க விரும்பவில்லை என்றும் விவாதிக்க முன் வரவில்லை எனவும் விமர்சித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com