கொடியிலேயே வீணாகும் சௌசௌ காய்கள்: கவலையில் ஆசனூர் மலைப்பகுதி விவசாயிகள்

கொடியிலேயே வீணாகும் சௌசௌ காய்கள்: கவலையில் ஆசனூர் மலைப்பகுதி விவசாயிகள்

கொடியிலேயே வீணாகும் சௌசௌ காய்கள்: கவலையில் ஆசனூர் மலைப்பகுதி விவசாயிகள்
Published on

கொரோனா ஊரடங்கால் சௌசௌ விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், சத்தியமங்கலம் ஆசனூர் மலைப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கொடியிலிருந்து சௌசௌ காய்கள் பறிக்கப்படாமல் வீணாகிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதி, கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளதால் ஊட்டி போல் குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது. இதனால் இங்கு மலை காய்கறிகள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இதன் காரணமாக ஆசனூர், மாவள்ளம், தேவர் நத்தம், கோட்டாடை, ஒசட்டி, கெத்தேசால், கானக்கரை, கேர்மாளம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சௌசௌ எனப்படும் மேராக்காய் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது.

கொடி வகையைச் சேர்ந்த சௌ சௌ திராட்சைக்கொடி போல் பந்தல் அமைத்து பராமரிக்கப்படுகிறது. இங்கு விளையும் சௌசௌ காய்களை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்து மேட்டுப்பாளையம், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இரு மாதங்களுக்கு முன்பு சௌசௌ கிலோ 8 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை வியாபாரிகள் கொள்முதல் செய்த நிலையில், தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் வராததால் விலை வீழ்ச்சி அடைந்து கிலோ 4 ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாகிறது. வியாபாரிகள் கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டாததால் ஒரு சில விவசாய தோட்டங்களில் சௌ சௌ காய்களை பறிக்காமல் கொடிகளில் அப்படியே விடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஆசனூர் மலைப்பகுதியில் சௌசௌ பயிரிட்ட விவசாயிகள் மிகுந்த நஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர். ஊரடங்கு காரணமாக வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் வாகனங்களில் காய்கறி விற்பனை நடைபெறுவதால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக சௌசௌ காய்களை கொள்முதல் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசனூர் மலைப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com