பழைய திட்டங்களை நிறுத்தினால் சட்ட சிக்கல்கள் வரும்: ஸ்டாலின் கேள்விக்கு முதல்வர் பதில்

பழைய திட்டங்களை நிறுத்தினால் சட்ட சிக்கல்கள் வரும்: ஸ்டாலின் கேள்விக்கு முதல்வர் பதில்
பழைய திட்டங்களை நிறுத்தினால் சட்ட சிக்கல்கள் வரும்: ஸ்டாலின் கேள்விக்கு முதல்வர் பதில்

பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல சட்ட முன்வடிவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். காவிரி வேளாண் மண்டல சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற முதல்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளின் அமைச்சர்கள், உயரதிகாரிகள் என குழுவில் 30பேர் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பின்னர், பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல சட்ட முன்வடிவு மீது விவாதம் நடைபெற்றது. அப்போது, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் இருந்து திருச்சி, கரூர், அரியலூர் மாவட்டங்கள் விடுப்பட்டிருப்பதற்கு என்ன காரணம் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

மேலும் ஸ்டாலின் பேசுகையில், “வேளாண் நிலங்கள் ரியல் எஸ்டேட் போடப்படுவது ஏன் தடுக்கவில்லை. ஏற்கனவே உள்ள திட்டங்கள் பாதிக்கப்படாது என்று சட்டத்தில் உள்ளது. நடைமுறையிலுள்ள ஹைட்ரோகார்பன் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும். சட்டமுன்வடிவை தேர்வு குழுவிற்கு அனுப்ப வேண்டும். இச்சட்டம் என்பது விவசாயத்திற்கு முழுமையான பாதுகாப்பு வழங்கும் சட்டமாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி, ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களை நிறுத்தினால் இதில் சட்ட சிக்கல்கள் உருவாகும் என சட்ட வல்லுநர்கள் தெரிவித்ததாக கூறினார். இதுகுறித்து அவர் பேசுகையில், “விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால்தான், நாம் சோற்றில் கை வைக்க முடியும். சட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. சட்ட வல்லுநர்களை கலந்தாலோசித்து மிக குறுகிய காலத்தில் இச்சட்டத்தை தாக்கல் செய்துள்ளோம்.

அரசு எடுத்த நடவடிக்கைகளால் வேளாண் தொழில் செழித்துள்ளது. விவசாயிகள் பிரச்சனை என்ன என்பதை அறிந்து கொண்டு நடவடிக்கை எடுக்கிறோம். அறிவிக்கப்பட்ட 10 நாட்களில் சட்டமுன்வடிவு கொண்டு வந்துள்ளோம். வேளாண் பெருமக்கள் ஆவலோடு எதிர்ப்பார்க்கும் இச்சட்டம் வரலாற்று சிறப்புமிக்கது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களை நிறுத்தினால் இதில் சட்ட சிக்கல்கள் உருவாகும் என சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர்.

திருச்சி தொழிற்சாலை நிறைந்த பகுதி என்பதால் அதை மண்டலத்திற்குள் கொண்டுவரப்படவில்லை. கரூர், திருச்சி, அரியலூர் ஒரு சில பகுதிகளை வேளாண் மண்டலத்தில் இணைத்துள்ளோம். இச்சட்டத்திற்கு முழுமையான அதிகாரம் உள்ளது. இந்த மசோதாவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும். தஞ்சாவூர் நாகப்பட்டினம் திருவாரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பிரதிநிதிகளாக குழுவில் இடம் பெறுவார்கள்” என்றார்.

இதனையடுத்து, வேளாண் மண்டலம் அறிவிப்பை திமுக வரவேற்கிறது என்று கூறிய ஸ்டாலின், தேர்வுக் குழுவுக்கு அனுப்பினால் முழு வெற்றியை பெறும் என்றும் வலியுறுத்தினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com