"காவிரி நீரை மறந்துவிட வேண்டியதுதான்!" - மேகதாதுவில் அணை கட்டுவதன் விளைவு: ஒரு பார்வை

"காவிரி நீரை மறந்துவிட வேண்டியதுதான்!" - மேகதாதுவில் அணை கட்டுவதன் விளைவு: ஒரு பார்வை
"காவிரி நீரை மறந்துவிட வேண்டியதுதான்!" - மேகதாதுவில் அணை கட்டுவதன் விளைவு: ஒரு பார்வை

கர்நாடகாவில் கடந்த சில ஆண்டுகளாகவே மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்ற குரல்கள் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆட்சிகள் மாறினாலும், ஆள்பவர்கள் மாறினாலும் கர்நாடகாவின் குரல் என்பது ஒன்றுதான், அது 'மேகதாதுவில் அணைகட்டவேண்டும்' என்பதுதான். இதன் விளைவு பற்றி சற்றே விரிவாக பார்ப்போம்.

மேகதாது அணை கட்டுமான ஆய்வுக்குழு கலைப்பு: கர்நாடக  அரசின் மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தச் சூழலில் சில வாரங்களுக்கு முன்பு அனுமதிபெறாமலேயே மேகதாதுவில் அணைகட்டும் பூர்வாங்க பணிகளை கர்நாடகா மேற்கொண்டுவருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரித்து, மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுகிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக ஒரு குழுவை அமைத்தது. 

ஆனால், இந்த ஆய்வுக்குழு தொடர்பான இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி கர்நாடக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, கர்நாடக அரசின் விளக்கத்தைக் கேட்ட தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், மேகதாது பகுதியில் ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவை கலைத்து உத்தரவிட்டது. அத்துடன், முறையான அனுமதியின்றி மேகதாது பகுதியில் எந்தப் பணியையும் மேற்கொள்ளக்கூடாது என கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தியது. இதுபற்றி பேசிய கர்நாடக முதல்வர் எடியூரப்பா, ‘தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இனி, மத்திய அரசு அனுமதி கொடுத்ததும், மேகதாது அணை கட்டும் பணியை தொடங்குவோம்’ என்றார்.

காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு கடும் எதிர்ப்பு: பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு பின்னர் மேகதாது விவகாரம் கர்நாடகாவில் பேசுபொருளானது. அதன்பின்னர் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை தீவிரப்படுத்தியது. இதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்தும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் நடந்த காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்திலும் தமிழ்நாடு அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்தது. 

'கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முயல்வதை நிறுத்த வேண்டும், அணை கட்டுவதற்கு எந்தவித ஆரம்பக்கட்டப் பணிகளையும் செய்ய ஆணையம் அனுமதிக்கக் கூடாது. மேலும், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் இக்கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிப்பதைத் தவிர்க்க வேண்டும்' என தமிழ்நாட்டின் சார்பில் அந்தக் கூட்டத்தில் அழுத்தமாக வலியுறுத்தப்பட்டது. 

கர்நாடக முதல்வரின் கடிதமும், தமிழ்நாடு முதல்வரின் பதிலும்: 'மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லை; எனவே காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதை தமிழக அரசு எதிர்க்கக் கூடாது. இது தொடர்பாக இரு மாநிலங்களும் பேச்சுவார்த்தை நடத்தலாம்' என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கு பதிலளித்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், “மேகதாது சமநிலை நீர்த்தேக்கப் பிரச்னையில், 67.16 டி.எம்.சி தண்ணீரைச் சேமிக்கும் நோக்கம் கொண்டதாக இத்திட்டம் உள்ளது. மேகதாதுவுடன் தமிழ்நாட்டின் இரண்டு நீர்மின் திட்டங்களை ஒப்பிடுவது சரியாக இருக்காது என்று கூற விரும்புகிறேன். இந்த இரண்டு நீர்மின் திட்டங்களில் நீர் பயன்பாடு இல்லை என்பதை ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்துகிறேன். கிடைக்கக்கூடிய நீர் உச்ச மின் தேவையை பூர்த்தி செய்ய உந்தப்பட்டு மீண்டும் புழக்கத்தில் விடப்படுகிறது. கூடுதல் பயன்பாடு எதுவும் உருவாக்கப்படவில்லை. இரண்டு திட்டங்களும் தமிழகத்தில் நீர்ப்பாசனம் அல்லது குடிநீர் பயன்பாட்டிற்கான நீர் கிடைப்பதை பாதிக்காது.

மேகதாது திட்டத்தைச் செயல்படுத்துவது தமிழ்நாட்டின் விவசாய சமூகத்தின் நலன்களை பாதிக்காது என்ற உங்கள் கருத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.  பெங்களூரு நகரப் பகுதியின் தேவையைப் பூர்த்திசெய்ய கர்நாடகாவில் ஏற்கெனவே போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கும்போது, 4.75 டி.எம்.சியைக் குடிநீர் தேவைக்காக 67.16 டி.எம்.சி சேமிப்புத் திறன் கொண்ட ஒரு நீர்த்தேக்கத்தின் தேவை என மேகதாது அணை கட்டப்படுவதாக நியாயப்படுத்தப்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இது கட்டாயம் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் கிடைப்பதை பாதிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் மேகதாது திட்டத்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கமளித்து, அந்த அணைக்கான எந்த அனுமதியையும் மத்திய அரசு வழங்கக்கூடாது என வலியுறுத்தவுள்ளார்.

மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன?

மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி  பேசும்  காவிரி  உரிமை மீட்புக்குழுவை  சேர்ந்த  கி.வெங்கட்ராமன்,  “மேகதாது அணை தமிழகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. காவிரி தீர்ப்பாயம் 192 டி.எம்.சி  தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கொடுக்கவேண்டும் என்று முதலில்  தீர்ப்பளித்தது. அதன் பிறகு வந்த  தீர்ப்பில் உச்சநீதிமன்றம் அதிலிருந்து 14.75 டி.எம்.சி தண்ணீரை குறைத்து தமிழ்நாட்டிற்கு வழங்கியது. இந்த  14.75  டி.எம்.சி தண்ணீர் என்பதே  பெங்களூருக்கான குடிநீர் தேவைக்காக என்றுதான் சொன்னார்கள். இப்போது  மீண்டும் குடிதண்ணீருக்காக  மேகதாதுவில் 67.16 டி.எம்.சி கொள்ளளவில்  அணை கட்டப்போவதாக  சொல்வது  சட்ட விரோதம். உச்சநீதிமன்ற  தீர்ப்பின்படிதான்  காவிரி  மேலாண்மை  ஆணையம் அமைக்கப்பட்டது.  இப்போது  அந்த  ஆணையத்தின் ஒப்புதலே  பெறாமலேயே இந்த அணையை  கட்டவும்  முயற்சி செய்வது சட்டவிரோதம்.

மேகதாது அணை கட்டப்பட்டால் நமக்கு அதன்பிறகு தண்ணீர்  கிடைக்கவே வாய்ப்பில்லை. ஏனென்றால் மேகதாது அணை 67.16 டி.எம்.சி கொள்ளளவில்  கட்டப்படுகிறது. இது கபினி,  ஹேரங்கி உள்ளிட்ட  அணைகளை விடவும் பெரியது.  இந்த அணைக் கட்டப்படும் மேகதாது  என்னும் இடம் கர்நாடகாவில்  இருந்துவரும் காவிரி  தண்ணீர் மேட்டூர் அணையில்  சேரும்  இடத்திற்கு  கொஞ்சம்  முன்னால் உள்ளது. இங்கு  அணை கட்டப்பட்டால்  காவிரியில் வரும் நீர் மற்றும்  இடைபட்ட பகுதிகளில் பொழியும்  மழை நீர் உள்ளிட்ட  அத்தனை நீரையும்  மேகதாதுவில்  நிரப்புவார்கள். அதன்பிறகு ஒரு சொட்டு  தண்ணீர்கூட தமிழகத்துக்கு வர வாய்ப்பில்லை. மேகதாதுவில் அணைகட்ட கர்நாடகம் மத்திய அரசிடம் பல வகைகளில் லாபி செய்கிறது. எனவே, தமிழ்நாடு அரசு எச்சரிக்கையுடன் இருந்து அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் கடும் அழுத்தத்தையும், எதிர்ப்பினையும் தெரிவிக்கவேண்டும்” என்கிறார்.

இது தொடர்பாக பேசும் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுந்தர.விமல்நாதன் கூறும்போது, “நான்கு மாநிலங்களிடையே பாயும் நதியான காவிரியில் கர்நாடகம் எந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதாக இருந்தாலும் அதுகுறித்து தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதால், அதன்படி இந்த மாநிலங்களின் அனுமதி இல்லாமல் புதிதாக எந்த மாநிலமும், எந்த அணையும் கட்ட இயலாது. இருந்தாலும் கர்நாடக அரசு இப்போது அணை கட்டுவோம் என பேசக் காரணம், மத்திய அரசின் துணிவில்தான்.

ஏற்கெனவே காவிரியின் குறுக்கே பல அணைகளை கட்டி கர்நாடகம் நமக்கு தண்ணீர் கொடுப்பது இல்லை. 50 ஆண்டுகளுக்கு முன்னர் 6 லட்சம் ஏக்கரில் விவசாயம் செய்துகொண்டிருந்த கர்நாடகா இன்று சுமார் 20 லட்சம் ஏக்கருக்கும் மேலாக விவசாயம் செய்கிறது. ஆனால், அப்போது 25 லட்சம் ஏக்கரில் விவசாயம் செய்துகொண்டிருந்த தமிழ்நாடு இப்போது வெறும் 15 லட்சம் ஏக்கர்கூட முறையாக விவசாயம் செய்வதில்லை.

இப்போதுகூட சட்டப்படி நமக்கு ஓர் ஆண்டுகூட கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட்டதே இல்லை. உபரி நீரைத்தான் ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகம் நமக்கு திறந்துவிடுகிறதே தவிர உரிய நீரை கொடுப்பதே இல்லை. இந்தச் சூழலில் மேகதாதுவிலும் அணை கட்டினால் காவிரி நீரை மறந்துவிட வேண்டியதுதான். மேட்டூர் அணையின் கொள்ளளவு 97 டி.எம்.சி ஆனால் அது தூர்ந்துபோய் இப்போது 70 டி.எம்.சி அளவுக்குத்தான் தண்ணீர் தேங்கும் நிலையில் உள்ளது. அதே கொள்ளளவுக்கு மேகதாதுவில் அணை கட்டினால் எப்படி நமக்கு தண்ணீர் வந்துசேரும்.

கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை நதிகளின் குறுக்கே இப்போதுள்ள அணைகளின் கொள்ளளவு 105 டிஎம்சி, இந்த சூழ்நிலையிலேயே கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தருவதில்லை. இதில் 67.16 டிஎம்சி கொள்ளளவுள்ள மேகதாது அணையும் கட்டப்பட்டால் கர்நாடக அணைகளின் கொள்ளளவு 172 டிஎம்சியாக அதிகரிக்கும். இதுமட்டுமின்றி கர்நாடகம் கணக்கில் காட்டாமல் 20-க்கும் அதிகமான டி.எம்.சி நீரை பல இடங்களில் தேக்கி வைக்கிறது. மேட்டூர் அணை கொள்ளளவை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகமான தண்ணீரை கர்நாடகம் தேக்கி வைத்தால் தமிழ்நாட்டுக்கு சுத்தமாக தண்ணீர் கிடைக்காது என்பதே உண்மை” என்கிறார் வருத்தத்துடன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com