கடலூர்: அம்பானி குழும அலுவலகத்தை முற்றுகையிட்டு விசிகவினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகத்தில் பல அரசியல் கட்சிகளும் விவசாயிகளும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூரில் அம்பானி குழும அலுவலகத்தை முற்றுகையிட்ட விசிகவினர் கைது செய்யப்பட்டனர். அதேபோல், மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை அவுரி திடலில் இரண்டாவது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரை பகுதியில் அம்பானி குழுமத்துக்கு சொந்தமான ஜியோ டெலிகம்யூனிகேஷன் அலுவலகம் செயல்பட்டுவருகிறது. வேளாண் சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் அதானி, அம்பானி குழும பொருட்களை வாங்க வேண்டாம் என வலியுறுத்தி இந்த அலுவலகத்தை முற்றுகையிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான விசிகவினர் புதிய வேளாண் சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக செயல்படும் ஜியோ, ரிலையன்ஸ் கம்பெனி தயாரிப்புகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். அவர்களை காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.
அதேபோல், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நாகை அவுரி திடலில் விவசாய சங்கங்கள் சார்பாக இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இரண்டாவது நாளாக நடைபெற்ற போராட்டத்திற்கு கீழ்வேளூர், திருக்குவளை, வேதாரண்யம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டிராக்டர்களில் விவசாயிகள் வந்தனர்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திமுக, விசிக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்றுள்ளனர். மாவட்ட காவல்துறை சார்பாக எஸ்பி ஓம் பிரகாஷ் மீனா தலைமையில் நூற்றுகணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.