ஒரு ரூபாய் தேக்கு கிழங்குகளில் 8 லட்சம் வருமானம்.. இது எதிர்காலத்திற்கானது; விவசாயியின் வெற்றி கதை!
விவசாயி மோகன கிருஷ்ணனுக்கு மர விவசாயத்தில் எப்படி ஆர்வம் வந்தது என்பது ஒரு சுவாரசியமான கதை. ஒரு ரூபாய் தேக்கு கிழங்கு இவரை மர விவசாயத்திற்கு மாற்றியுள்ளது.
“ஒரு முறை வைத்தீஸ்வரன் கோயில் போனபோது, அங்கே தேக்கு கிழங்கு வித்துகிட்டுருந்தாங்க. தேக்கு மரம் வளர்க்க இந்த கிழங்கே போதும், ஒரு ரூபாய்க்கு ஒரு தேக்கு கிழங்கு என கூவிக்கூவி விற்றுக்கொண்டிருந்தார்கள், நானும் சில கிழங்குகளை வாங்கி வந்து எனது நிலத்தில் வரப்போரம் நட்டேன். அந்த தேக்கு மரம் வெறும் 17 வருஷத்திலேயே நல்லா வளர்ந்திருச்சு, அந்த மரங்களை வெட்டி வித்ததுல 8 லட்சம் கிடைச்சது” என்று தேக்கு விற்ற கதையை கூறினார்.
மர விவசாயத்தில் இவர் பெற்ற வெற்றியைப் பார்த்து, இவரது மைத்துனரும் அவரது நிலத்தை மர விவசாயம் செய்ய கொடுத்துள்ளார். இருவரும் சேர்ந்து மொத்தம் 36 ஏக்கர் நிலத்தில் மர விவசாயம் செய்து தங்களது எதிர்கால பொருளாதார நலனுக்கு ஒரு பாதுகாப்பை உருவாக்கியுள்ளனர். சேத்துப்பட்டு - வந்தவாசி சாலையில், கொழப்பலூர் அருகே உள்ள நல்லிடைசேனை கிராமத்தில் இவரது பண்ணை உள்ளது.
“இந்த மாதிரி மரங்களை வளர்க்கிறது வருமானத்துக்கு ஒரு நல்ல வழின்னு தோனுச்சு, அதனால 2008ல் இருந்து நிறைய மரங்களை நடவு செய்ய ஆரம்பித்தேன். இப்போ 13 ஏக்கர்ல மரங்கள் வளர்ந்து நிக்குது. செம்மரம், வேங்கை, மஞ்சள் கடம்பு, ஈட்டி என ஒவ்வொன்றையும் 2 ஏக்கர்ல தனித்தனி தோப்பா நட்டிருக்கேன். 5 ஏக்கர்ல செம்மரம், வேங்கை, மஞ்சக்கடம்பு, ஈட்டி, மலைவேம்பு மரங்களை வரிசை வரிசையாய் நட்டிருக்கேன். நட்ட மரமெல்லாம் இப்போ 50 அடிக்கு மேல வளர்ந்து நிக்குது, நான் வெட்டி வித்த தேக்கு மரத்துலயும் மறுதாம்பு வளர்ந்து நல்ல மரமா நிக்குது. என்னோட நிலம் செம்மண் சரளை பூமின்றதால வேங்கை மரம் அருமையா வளர்ந்திருக்கு.” என்று சந்தோஷப்படுகிறார்.
ஊடு பயிரும் வருமானம் தரும்
தொடர்ந்து பேசியவர், “மரக்கன்னு நட்டு ஒரு நாலு வருஷம் ஊடுபயிர் செய்யலாம்னு சொன்னாங்க, நட்டு பார்த்தேன், நல்லாவே வந்துச்சு. கேழ்வரகு, உளுந்து, வேர்க்கடலை இங்க நல்லா வளரும், அதையே போட்டு ஊடுபயிர்லயும் கொஞ்சம் வருமானம் பார்க்கிறேன்” என்று உப வருமானம் பெறும் வழியையும் கூறினார்.
கணக்கு பார்க்காம விவசாயம் பண்ணாதீங்க
மேலும் ஐந்து ஏக்கர் நிலத்தில் பாரம்பரிய நெல் வகைகளை சாகுபடி செய்கிறார். "என்னோட அன்றாட செலவுக்கு நெல் விவசாயத்துல வரும் வருமானம் போதுமானதா இருக்கு, இயற்கை சார்ந்த வாழ்வியல்ல எனக்கு ஆர்வம், அதனால நான் மர விவசாயமும் செய்கிறேன், இதுல நல்ல வருமானமும் வருது. நட்ட மரங்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வருமானம் தரும். இந்த மரங்களோட மதிப்பு எதிர்காலத்தில் பல லட்சங்களைத் தாண்டும். இந்த உத்தரவாதம் எனக்கு எதிர்காலத்தைப் பற்றி கவலையில்லாத ஒரு நிம்மதியை கொடுக்குது. ஆசைக்காக மரம் வளர்த்தாலும், இயற்கைக்காக மரம் வளர்த்தாலும், கணக்கு பார்த்தே விவசாயம் செய்யறது பாதுகாப்பானது.” என்று தெளிவு படுத்துகிறார்.
மைத்துனரின் நிலத்திலும் மர விவசாயம்
இவரது மைத்துனர் ரவிச்சந்திரன் சென்னையில் வசிப்பதால் மோகனகிருஷ்ணனே அவரது நிலத்தில் மர நடவு செய்து கொடுத்துள்ளார். தற்போது இவரது கிராமத்திற்கு அருகே உள்ள தென்கடப்பந்தாங்கலில் உள்ள ரவிச்சந்திரனது 24 ஏக்கர் நிலமும் ஒரு மரப்பண்ணையாக உருவாகியுள்ளது.
இதைப்பற்றி ரவிச்சந்திரன் “என்னோட நிலத்துல செம்மரம், ஈட்டி, வேங்கை, மலைவேம்பு இப்படி கலப்பு மரங்கள்தான் இருக்கு. 10 வருஷத்துக்கு முன்னாடி மோகனகிருஷ்ணன் தான் என் நிலத்துல மரம் நட்டுக்கொடுத்தார். அன்றிலிருந்து இன்று வரை அவரேதான் நிலத்தை பராமரிக்கிறார். அவரோட உதவியால் சென்னையில் இருக்கிற என்னால் இவ்வளவு மரத்தையும் நட முடிஞ்சது. உள்ளூரில் நிலம் வச்சுக்கிட்டு வெளியூரில் வேலை செய்கிற என்னை போன்றவர்களுக்கு மர விவசாயம் ஒரு நல்ல தீர்வா இருக்கு. இதுக்கு குறைந்த செலவு, குறைந்த ஆள், குறைந்த பராமரிப்பு போதும்.” என்று மனமிருந்தால் மரம் வளர்க்க வழியுண்டு எனத் தெளிவு படுத்துகிறார்.
மரம் வளர்ப்பது ஒரு வங்கி சேமிப்பு போன்றது
எங்களோட சின்ன முயற்சி, இன்னைக்கு பல கோடிக்கு மதிப்பானதா மாறியிருக்கு. ஒரு ஏக்கரில் 250 மரங்கள் இருக்கு, மரத்துக்கு 5,000-10,000 ரூபாய் மதிப்பு என்றாலும் 6,000-7,200 மரங்களுக்கு எப்படியும் குறைந்தபட்சம் 3 - 5 கோடி மதிப்பு பெறும். மரங்களின் மதிப்பை உணர்ந்ததால் மேலும் எனது 6 ஏக்கர் நிலத்தில் மரம் நட்டிருக்கிறேன். தேவைப்படும் மரக்கன்றுகளை விழுப்புரம் ஈஷா நர்சரியில் வாங்கி நடுவேன். விவசாயிகளுக்கு ஒரு டிம்பர் மரக்கன்று 3 ரூபாய்க்கு தராங்க. மரம் வளர்ப்பதற்கு நாம செய்ற ஒரு சின்ன முதலீடு, சமூகத்துக்கு ஒரு நன்மையாகவும், குடும்பத்துக்கு எதிர்காலத்தில் நல்ல வருமானமாகவும் இருக்கும்.” என்கிறார் ரவிச்சந்திரன்.
மரங்களுக்கு இடையில் மிளகு சாகுபடி
தொடர்ந்து பேசிய மோகன கிருஷ்ணன், "இந்த நிலம் செம்மண் சரளையாக இருப்பதால் செம்மரம், வேங்கை, ஈட்டி மரங்கள் எல்லாம் நன்கு பருத்து அதிக சுற்றளவு வந்திருக்கு. மண் கண்டம் குறைவா இருக்கிறதால மலைவேம்பு சுற்றளவு குறைவா இருக்கு. மரங்கள் எல்லாம் வளர்ந்து விட்டதால் நல்ல குளிச்சியை உணர முடிகிறது. இங்கு சமவெளியில் விளையிற மிளகு ரகங்களாக கரிமுண்டா மற்றும் பன்னியூர் ரகங்களை நடலாம்னு காவேரி கூக்குரல் பணியாளர்கள் சொன்னாங்க, நானும் நடலாம்னு இருக்கேன்.” என்று மிளகு சாகுபடி மூலம் கூடுதல் வருமானம் பெறும் திட்டத்தையும் கூறினார்.