வேளாண் பட்ஜெட்... தமிழக விவசாயிகள் எதிர்பார்ப்புகள் என்ன? விரிவான பார்வை

வேளாண் பட்ஜெட்... தமிழக விவசாயிகள் எதிர்பார்ப்புகள் என்ன? விரிவான பார்வை
வேளாண் பட்ஜெட்... தமிழக விவசாயிகள் எதிர்பார்ப்புகள் என்ன? விரிவான பார்வை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் விரைவில் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதற்காக தமிழக அரசு பல்வேறு மாவட்ட விவசாயிகளிடமும் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்திவருகிறது. வேளாண் பட்ஜெட் குறித்து விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்ன என்பது குறித்த விரிவான பார்வை...

திமுக வெற்றி பெற்ற பிறகு கடந்த முறை இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது, தற்போது 2022-23ஆம் ஆண்டுக்கான முழுமையான நிலை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. எனவே இந்த அறிக்கை குறித்த எதிர்பார்ப்புகள் விவசாயிகளிடம் அதிக அளவில் உள்ளது. வேளாண் பட்ஜெட் குறித்து விவசாயிகளின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் என்ன என்று பார்ப்போம்…

நெல், கரும்பு, விளைபொருட்களுக்கு உரிய விலை வழங்க வேண்டும்:

இது தொடர்பாக பேசிய காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை விமல்நாதன், “தற்போது மத்திய அரசின் பயிர் காப்பீட்டு திட்டம் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது, இது பல குறைபாடுகளை கொண்டுள்ளது. எனவே, மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழக அரசே ஒரு பயிர் காப்பீட்டுத் திட்டத்தை ஏற்படுத்த வேண்டும்.  அதுபோல வேளாண் பட்ஜெட்டுக்காக தற்போது விவசாயிகளிடம் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்துவது வரவேற்கக் கூடிய விஷயம். இந்த கூட்டங்களில் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை செயல்படுத்தவும் அரசு முனைப்பு காட்ட வேண்டும்.

நெல்லுக்கு 2500 ரூபாய் குவிண்டாலுக்கு வழங்குவோம் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தது, ஆனால் தற்போது 2060 ரூபாய் மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. எனவே, திமுக தனது தேர்தல்அறிக்கை உறுதி மொழியை செயல் படுத்த வேண்டும். ஏனென்றால் கேரளா, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில்  நெல்லுக்கு அதிக விலை வழங்கப்படுகிறது. மேலும் கரும்பு, உள்ளிட்ட விளைபொருட்களுக்கும் உரிய விலை வழங்க வேண்டும் அதனைப்போல இந்தியாவின் முன்மாதிரி திட்டமாக உழவர்களின் சிறப்பு ஓய்வூதிய வெகுமதி திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். இதில் 60 வயதை கடந்த ஆண் உழவர்கள் மற்றும்  58 வயதை கடந்த பெண் உழவர்கள்,  உழவுத் தொழிலாளிகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமாக வழங்க வேண்டும்” என தெரிவித்தார்

இலவச விவசாய மின்சாரம், உழவர் ஓய்வூதியம்:

தொடர்ந்து பேசிய விமல்நாதன், “ தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் சிறு, குறு விவசாயிகளின் நலன்கருதி கட்டண விவசாய மின் இணைப்பான பூந்தோட்ட மின் இணைப்பு எனப்படும் 3ஏ 1 மின் இணைப்பை இலவச மின் இணைப்பாக அறிவித்திட வேண்டும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஒரு லட்சம் இலவச மின் இணைப்புகளை வழங்குவதில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கரும்பு உற்பத்தி மிகவும் குறைந்து விட்டது, எனவே கரும்பு உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கிட சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து, கரும்பு உற்பத்தி அதிகரிக்க அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும். பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தில் சேர்க்கப்படாமல் விடுபட்ட மத்தியகால மறு மாற்று கடன் சுமார் 400 கோடியையும் அரசு தள்ளுபடி செய்திட வேண்டும். இயற்கை வேளாண் தந்தை நம்மாழ்வாருக்கு கல்லணை கரையில் நினைவு மண்டபம் மற்றும் நினைவுக் கல்லூரி அமைத்திட வேண்டும்.

தெலுங்கானாவில் ரயத் பந்த் என்ற திட்டம் மூலம் ஊக்குவிப்புத் தொகையாக ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது ஆந்திராவில் ஏக்கருக்கு 13 ஆயிரத்து 500 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது. அதுபோல ஒடிசா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் ஏக்கருக்கு 10,000 ரூபாய் ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படுகிறது. எனவே தமிழ்நாடு அரசும் இதுபோல ஊக்குவிப்புத் தொகை வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும் இயற்கை வேளாண் வல்லுநர் சுபாஷ் பாலேகர் மூலமாக  தமிழகத்தில் இயற்கை வேளாண் வகுப்புகள் மற்றும் சிறப்பு பயிற்சி வகுப்புகள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்திட நிதி ஒதுக்கீடு செய்திடவேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்கு தனி அலுவலகம்:

வேளாண் பட்ஜெட் தொடர்பாக தமிழக அரசிடம் கோரிக்கைகளை வைத்த விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் வெ.ஜீவக்குமார், “ நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும். முக்கியமாக நெல் கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ மூட்டை ஒன்றுக்கு 40 ரூபாய் லஞ்சமாக வாங்கப்படுகிறது, அதாவது கிலோவுக்கு ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து ஒரு பைசா லஞ்சம் வாங்கினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்கள் கூறினாலும்கூட, இந்த லஞ்சம் இப்போதும் வாங்கப்படுகிறது, இதனைத் தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த காலங்களைப்போலவே தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளிவந்து பயமுறுத்திக்கொண்டுள்ளன. எனவே காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக உறுதி செய்து, அதற்கு தஞ்சையில் தனி அலுவலகம் ஏற்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு பல நன்மைகளை ஏற்படுத்திய குடிமராமத்து திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

தற்போது வேளாண் இயந்திரங்களின் வாடகை விவசாயிகளை வாட்டி வதைக்கிறது, எனவே கூடுதல் வாடகை வசூல் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழகத்தில் ஒவ்வொரு பிளாக்கிலும் விவசாய மேம்பாட்டு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு மாற்றுப்பயிர், பயிர்சாகுபடி ஆலோசனை, மண் மற்றும் பயிர் பரிசோதனை செய்ய மினி கிளீனிக்குகள் ஏற்படுத்த வேண்டும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 1 லட்சம் இலவச விவசாய மின் இணைப்புகளில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும்,  3ஏ 1 முறையில் மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுக்கும் கட்டுப்பாடு இல்லாமல் இலவச மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும்” என தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com