மின்வழி பாதைகளை அமைக்கும்போது குறைந்தளவு பாதிப்புக்கு திட்டமிடுங்கள்: நீதிமன்றம்
மின்வழி பாதைகளை அமைக்கும்போது விவசாயிகள் மற்றும் விளை நிலங்களுக்கு குறைந்தளவு பாதிப்பு இருக்கும் வகையில் திட்டமிடுங்கள் என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் சஞ்சீப் பானர்ஜி மற்றும் எம்.எம். சுந்தரேஷ் அடங்கிய அமர்வில் விவசாயிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு அளிக்காத வகையில் மின் வழி பாதைகளை அமைக்கும்படி வேண்டி பொது நல வழக்கு தொடுக்கப்பட்டது. அதை விசாரித்த நீதிபதிகள் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர்.
மனுதாரர் தரப்பில் விவசாய நிலங்களில் மின்வழிப்பாதை அமைக்கும்போது விவசாயிகள் சந்திக்கும் சிக்கல்கள் மற்றும் எப்படி பெரும்பாலான விளை நிலம் விவசாயம் செய்ய முடியாத அளவிற்கு பாதிக்கப்படுகிறது என்பது குறித்து தனது மனுவில் விளக்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த மனுவை மெட்ராஸ் ஐஐடி-யின் எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் துறை தலைவரின் பார்வைக்கு அனுப்பவும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து இந்த வழக்கை வரும் பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர் நீதிபதிகள்.