பெரம்பலூர்: “மழை காரணமாக விளைச்சல் இருந்தும் விலையில்லை” – வேதனையில் பூசணி விவசாயிகள்!
செய்தியாளர்: அச்சுத ராஜகோபால்
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஆலத்தூர் தாலுகாவில் சா.குடிகாடு, சாத்தனூர், கொளக்காநத்தம், கொட்டரை, ஆதனூர் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் வேப்பந்தட்டை தாலுகாவில் பாளையூர், பிள்ளையார்பாளையம், அன்னமங்கலம், தொண்டமாந்துறை, மேட்டூர் ஆகிய பகுதிகளில் சுமார் ஐம்பது ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்களில் பூசணியை விவசாயிகள் பயிரிட்டு வந்தனர்.
இந்நிலையில் இந்தாண்டு பருவமழை குறைவு காரணமாக இப்பகுதியில் இருபது ஏக்கராக பரப்பளவு குறைந்து ஆடிபட்டத்திற்கான பூசணி பயிரிடப்பட்டிருந்தது. ஆனால் அப்பகுதிகளில் விதைப்பின்போது மழை இல்லாமல் காப்பு பருவத்திலும் அறுவடை பருவத்திலும் மாறிமாறி கனமழை பெய்தது. இதன் காரணமாக நன்கு காப்பு வந்திருந்தும் பூசணிகள் விளைநிலங்களிலேயே அழுகி வீணாகியது.
இதனால் விவசாயிகள் அறுவடை செய்த காய்களை மார்கெட்டுகளுக்கு அனுப்ப ஆயத்தமான நிலையில், காய்களை கிலோ 4 ரூபாய்க்கு கேட்டுள்ளனர். ஏற்றுக் கூலி இறக்கு கூலி, விதை என ஏக்கருக்கு ஐந்தாயிரம் வரையில் செலவு செய்துள்ள விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. இதையடுத்து விவசாயிகள் காய்களை அருகில் உள்ளவர்களின் வீட்டுத் தேவைக்கும் மாடுகளுக்கும் போக மீதமுள்ள பூசணிகளை அருகில் உள்ள சாக்கடையில் மனமின்றி தூக்கிவீசினர்.
கடந்த மாத தொடக்கத்தில் இருந்து பூசணி வரத்து அதிகம் காணப்பட்டாலும் வெளி சந்தைகளில் அதன் விலை கிலோ 24 ரூபாய் வரையில் விற்பணை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது போதிய விலை கிடைக்காததால் பூசணி விவசயிகள் வேதனை அடைந்துள்ளனர்.