இன்று தேசிய விவசாயிகள் தினம்: விவசாய பிரச்னைகளில் அரசு கவனம் செலுத்த கோரிக்கை
முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் பிறந்த நாளான இன்று தேசிய விவசாயிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில், விவசாயப் பிரச்னைகளில் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் விவசாய தொழிலில் 60 சதவிகிதம் பேர் ஈடுபட்டுள்ளனர். பசுமை புரட்சியின் பாதிப்புகள் மண் வளத்தை நஞ்சாக்கி இருந்தாலும், விவசாயிகளின் தொடர் உழைப்பால் ஆண்டிற்கு 265 மில்லியன் டன் உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இப்படி விவசாயத்தில் பல சாதனைகள் தொடர்ந்துகொண்டிருந்தாலும் இன்னும், ஆயிரக்கணக்கான விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக நீர் மேலாண்மை இல்லாததால், முப்போக சாகுபடி செய்யப்பட்ட நிலத்தில் தற்போது ஒரு போக சாகுபடிக்கு கூட வழியில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது ஒருபுறமிருக்க விவசாய இடுபொருட்களின் விலையேற்றம், உற்பத்திற்கேற்ற விலை கிடைக்காதது உள்ளிட்ட பிரச்னைகளாலும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், வங்கிகளில் கடனும் கிடைப்பதில்லை என்றும் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஊருக்கே உணவளிக்கும் விவசாயிகளின் பிரச்னைகளில் மத்திய-மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். நீர்நிலைகளை சீரமைத்து எப்போதும் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தும் விவசாயிகள், நீர்மேலாண்மைக்கு தனித்துறை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளுக்கும் அரசு செவி சாய்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.