இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின், நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இயற்கை வேளாண்மை முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட நம்மாழ்வாரின் முயற்சியை, அவரது ஆதரவாளர்கள் தற்போதும் தொடர்கின்றனர். இளைஞர்கள், குழந்தைகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நம்மாழ்வாரின் எண்ணமும் நிறைவேறி வருகிறது.
நம்மாழ்வார் உருவாக்கிய வானகம் பகுதியில் நடைபெறும் பயிற்சி முகாமில் பங்கேற்பவர்களுக்கு, இயற்கை வேளாண்மை, தமிழர்களின் பண்பாடு சார்ந்த கலைகள் போன்றவை தற்போதும் பயிற்றுவிக்கப்படுகின்றன. சிறுவர்களிடமும், இளைஞர்களிடமும் இயற்கை வேளாண்மை தொடர்பான கருத்தை ஏற்கச் செய்தால்தான், சமூக மாற்றத்திற்கு வித்திட முடியும் என்ற நம்மாழ்வாரின் சிந்தனையை இப்படித்தான் தொடர்ந்து செயலாக்கிக் கொண்டிருக்கிறது வானகம்.
சுவரில்லா கல்வியை உருவாக்க வேண்டும் என்ற நம்மாழ்வாரின் கொள்கைக்கும் வானகம் உயிர் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இங்கு கற்றுத் தரப்படும் இயற்கை வாழ்வியல் முறை மற்றும் பாரம்பரிய கலைகளை இங்கு வருபவர்கள் விருப்பத்துடன் கற்றுக் கொள்கின்றனர். நம்மாழ்வார் வாழ்ந்த காலத்தில் எத்தகைய அறிவாற்றலை அடுத்த தலைமுறைக்கு கற்றுக் கொடுக்கப் பாடுபட்டாரோ, அதனை இன்றளவும் செய்து வருகிறது வானகம்.
இயற்கை வேளாண்மை தொடர்பான சமூக மாற்றத்தை இளைஞர்கள் மூலமாகவே ஏற்படுத்த முடியும் என்பதில் நம்மாழ்வார் உறுதியாக இருந்தார். இயற்கை வேளாண்மை மீதான ஈடுபாடும், அக்கறையும் இளைஞர்களிடம் அதிகரித்துள்ளதற்கு, வாழ்நாள் முழுவதையும் விதையாக மாற்றி நம்மாழ்வார் தந்த ஆக்கமும், ஊக்கமும்தான் காரணம் என்பதை உறுதியாக நம்பலாம்.