மேட்டூர் அணை திறந்தும் கடைமடைக்கு வந்து சேராத தண்ணீர்.. கருகும் பயிர்களை கண்டு வேதனையில் விவசாயிகள்!

மேட்டூர் அணை திறந்து இரண்டரை மாதங்களை கடந்தும் கடைமடைக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. குருவை சாகுபடி பொய்த்துபோன நிலையில், சம்பா சாகுபடியையும் உரிய நேரத்தில் துவங்க முடியாமல் சீர்காழி பகுதி விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
farm land
farm landpt desk

மேட்டூர் அணை கடந்த ஜூன் 12ஆம் தேதி திறக்கப்பட்டு இரண்டரை மாதங்களை கடந்தும் தற்போது வரை கடைமடை பகுதியான சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார், தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு முழுமையாக தண்ணீர் வந்து சேரவில்லை. உரிய நேரத்தில் தண்ணீர் வராததால் குருவை சாகுபடி முற்றிலும் குறைந்து போனது. குறுவை பாசன வசதி கொண்ட ஒரு சில விவசாயிகள் மட்டும் குறுவை சாகுபடி செய்த நிலையில், அவையும் பல இடங்களில் தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்டது.

check dam
check dampt desk

இந்நிலையில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் இறுதி வாரத்தில் சம்பா சாகுபடி பணியை விவசாயிகள் துவங்குவது வழக்கம். 50 ஆயிரம் ஏக்கர் வரை ஒரு போக சம்பா சாகுபடியை மட்டுமே இப்பகுதி விவசாயிகள் நம்பியுள்ளனர். ஆனால், இந்த ஆண்டு தற்போது வரை பாசன ஆறுகளிலோ, கிளை வாய்க்கால்களிலோ சிறிதளவு கூட தண்ணீர் இல்லாததாலும், போதிய மழை பெய்யாததாலும் சம்பா சாகுபடி பணியை துவங்க முடியாமல் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மேட்டூர் அணை திறக்கப்பட்டால் 15 முதல் 20 தினங்களில் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேருவது வழக்கம்.

ஆனால், இந்த ஆண்டு இரண்டரை மாதங்கள் கடந்த பின்னரும் தற்போது வரை ஆறுகளிலோ கிளை வாக்காளர்களிலோ தண்ணீர் வரவில்லை. இதனால் சம்பா சாகுபடி பணியை துவங்கலாமா? வேண்டாமா? என்கிற கேள்விக்குறியுடன் கடைமடை விவசாயிகள் காத்துள்ளனர்.

மழையை நம்பி நேரடி சாகுபடி பணியை துவங்க உள்ள விவசாயிகளும் உரிய மழையில்லாததால் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

farmer
farmerpt desk

காலம் கடந்து தண்ணீர் வந்து சேரும் போது சாகுபடியும் காலம் கடந்து செய்யப்படுவதால் பருவ மழையில் பயிர்கள் பாதிக்கும் நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே கடைமடை பகுதியான சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார், தரங்கம்பாடி பகுதிகளுக்கு விரைந்து தண்ணீர் திறக்கவும் முறை வைக்காமல் தடையின்றி தண்ணீர் வழங்க வேண்டும் எனவும் இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com