இன்றே கடைசி நாள்.. பயிர் காப்பீடு செய்ய பல இடங்களில் காத்திருக்கும் விவசாயிகள்!
தமிழகத்தில் 12.14 லட்சம் விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனர். இன்றுடன் கடைசி என்பதால் பல இடங்களில் காப்பீடு செய்ய விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
இதுவரை 12.14 லட்சம் விவசாயிகள் காப்பீடு!
தமிழகத்தில் இந்த ஆண்டு 34 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்காக கடந்த செப்டம்பர் 15ஆம் தேதியே விவசாயிகள் நவம்பர் 15க்குள் காப்பீடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் 34.3 லட்சம் ஏக்கர் அளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் இன்று பகல் 12 மணி வரை 22.59 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்ட சம்பாவுக்கு 12.14 லட்சம் விவசாயிகள் காப்பீடு செய்துள்ளதாக வேளாண்துறை தகவல் தெரிவித்துள்ளது. காப்பீடு செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் ஒருசில மாவட்டங்களில் இன்று விவசாயிகள் காப்பீடு செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள்.
காப்பீடு செய்ய என்ன ஆவணங்கள் வேண்டும்?
சிட்டா அடங்கல், ஆதார் மற்றும் வங்கி புத்தக தகவல்களுடன் காப்பீடு செய்யவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. பயிர் கடன் பெற்றவர்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் செலுத்த வேண்டும். பயிர் கடன் பெறாத நபர்கள் பொது சேவை மையங்களில் காப்பீடு செய்யலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் இன்று பகல் 12 மணிக்குள் 12.14 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர்.
நீட்டிப்பு செய்யும் வாய்ப்பு இருக்கிறதா?
இதுகுறித்து வேளாண்மை துறை செயலாளரிடம் கேட்டதற்கு, மத்திய அரசிடம் கால நீட்டிப்புக்கு கேட்டு உள்ளோம் என தெரிவித்துள்ளார். தற்போது இதில் குறிப்பிட்டுள்ள விவசாயிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆன்லைன் மூலமாக பதிவு செய்யவில்லை. அவர்கள் நேரடியாக வாங்குவதால் விவசாயிகள் எண்ணிக்கையும் பரப்பளவும் அதிகரிக்கும். அடுத்த சில நாட்களில் அதுகுறித்த முழு விவரம் தெரியவரும் எனவும் தகவலாக உள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு சில விவசாயிகள் காப்பீடு செய்ய ஆர்வம் காட்டவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு கடந்த ஆண்டு காப்பீடு செய்வதற்கு சரியாக இழப்பீடு வராதது காரணமாக கூறப்படுகிறது.