கும்பகோணத்தில் விளைந்த 'கிராம அரிசி' ஆப்ரிக்கா, அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி
கும்பகோணத்தில் விளைந்த 4 ஆயிரத்து 5 கிலோ அரிசி ஆப்ரிக்கா மற்றும் அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
கிளாசிக்கல் ப்ரீடிங் முறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த அரிசியில் 15 % புரதம், 14% நார்ச்சத்து இருக்கிறது. இது மற்ற அரிசி வகைகளில் இருப்பதை விட அதிகம் என்கின்றனர் நிபுணர்கள்.
கும்பகோணம், தஞ்சை 'கிராமத்து அரிசி' என்கிற பெயரிலான அரிசியை உதயா வேளாண் பண்ணை என்ற நிறுவனம் விமானம் மற்றும் கப்பல் வழியாக கானா மற்றும் ஏமன் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணையமான அபெடா, வரும் மாதங்களில் இந்த அரிசியின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான உதவிகளை இந்த வேளாண் பண்ணைக்கு அளித்து வருகிறது.
இந்த அரிசியில் உள்ள சத்துகள் காரணமாக வெளிநாடுகளில் வரவேற்பு உள்ளதாக இந்த வேளாண் பண்ணை நிறுவனத்தினர் கூறுகின்றனர். மேலும், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாகவும் அரிசியை மாற்றி விற்பதற்கான நடவடிக்கைகளை இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
நஞ்சில்லா உணவு என்ற வகையில் சாகுபடி செய்யப்படும் கிராமத்து அரிசியில் கிளைசமிக் இன்டக்ஸ் குறைவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகளும், உடல் ஆரோக்கியத்தை விரும்புவோரும் இந்த அரிசியை விரும்புவதாக வேளாண் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.