"நீங்கள் செய்வது தவறு!" - விவசாயிகள் ஆதரவு பிரியங்கா சோப்ரா, தில்ஜித் மீது கங்கனா சாடல்
"விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த பிரியங்கா சோப்ரா, தில்ஜித் தோசன்ஜி ஆகியோர் விவசாயிகளை தவறாக வழிநடத்துகிறார்கள்" என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் கடந்த 16 நாட்களாக போராடி வருகிறார்கள். குறிப்பாக, டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
அப்படித்தான், பஞ்சாபின் பிரபல பாடகர் தில்ஜித் தோசன்ஜி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு, டெல்லி குளிரில் இருக்கும் விவசாயிகள் போர்வை வாங்குவதற்காக 1 கோடி ரூபாய் நிவாரண நிதியை அளித்து உதவினார். அதேபோல, நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் “இந்தியாவின் உணவுப் படை வீரர்கள் விவசாயிகள்தான். அவர்களின் பிரச்சனைகளை அரசு தீர்க்கவேண்டும்” என்றுக்கூறி ஆதரவு கொடுத்தார்.
இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து எதிர்த்துவரும் நடிகை கங்கனா ரனாவத் தனது ட்விட்டர் பக்கத்தில் "போராட்டத்தில் பங்கேற்றுள்ள விவசாயிகள் மட்டுமல்ல; அவர்களை ஆதரிக்கும் ஒவ்வொராலும் பிரச்னைதான். புதிய வேளாண் சட்டங்கள் எவ்வளவு முக்கியமானது என்பதை அனைவரும் அறிவார்கள். ஆனால், இதனை ஆதரிப்பவர்கள் அவர்களின் சுயலாபத்திற்காக அப்பாவி விவசாயிகளை வன்முறையில் ஈடுபட தூண்டுகிறார்கள். பிரியங்கா சோப்ராவும் தில்ஜித்தும் விவசாயிகள் போராட்டம் விஷயத்தில் தவறாக வழிநடுத்துகிறார்கள். இதற்காக, அவர்களுக்கு இடதுசாரிய, இஸ்லாமிய சார்பு மற்றும் இந்திய எதிர்ப்பு இந்திய திரைத்துறையினர், ஆங்கிலேயே காலனித்துவ ஊடக நிறுவனங்கள் விருதுகளைக்கூட வழங்கலாம்" என்று கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
ஏற்கெனவே, விவசாய சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள் என்று கங்கனா ரனாவத் கூறியது கடும் கண்டனத்துக்கு உள்ளானது. தற்போது விவசாயிகளுக்கு ஆதரவு கொடுப்போரையும் சாடி வருகிறார்.