திண்டுக்கல்: தொடர்மழையால் கருகிய மல்லிகைச் செடிகள்... அழுகிய மலர்கள்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தொடர் மழையால் மல்லிகைச் செடிகள் கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதனால் மார்க்கெட்டுக்கு மல்லிகையின் வரத்து பெரிதும் குறைந்து விலை ஒரு கிலோ 3 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. நிலக்கோட்டை, வத்தலகுண்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லிகை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இடைவிடாது பெய்துவரும் மழையால் மல்லிகைச் செடிகளை கருகல் நோய் தாக்கி மலர்கள் வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் பெருமளவில் இழப்பைச் சந்தித்துள்ளதாகவும் அவர்கள் கவலையுடன் கூறுகின்றனர்.
இதனால் தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஆகவே, அழுகல் நோயைக் கட்டுப்படுத்த வேளாண்துறையினர் தங்களுக்கு உதவிட வேண்டும் என்றும் மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.