நகைக்கடன் ரத்து - விவசாயத்துக்கு ஆபத்து? – கூட்டுறவு வங்கிகளில் குழப்பம் ஏன்?
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக விவசாயிகள் தங்களது பயிர் சாகுபடியை தொடங்கவுள்ள இந்தச் சூழலில் இதுபோன்ற தகவல்கள் அவர்களை கலக்கமடைய செய்துள்ளது. ஆனால் இதுகுறித்து பேசிய தமிழக முதல்வர் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்திவைக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இருந்தாலும் தமிழக அரசு இதுபற்றி தெளிவான விளக்கமளித்து, கூட்டுறவு வங்கிகளின் சிறப்பான செயல்பாட்டை உறுதிட செய்யவேண்டும் என்கின்றனர் அரசியல் கட்சியினர்.
என்னதான் குழப்பம்?
விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி வழக்கறிஞர் ஜீவக்குமார் “ தமிழ்நாட்டில் ஒரு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி, 23 மத்தியக் கூட்டுறவு வங்கிகள், 4,450 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், 128 நகரக் கூட்டுறவு வங்கிகள், 114 நகர கூட்டுறவு சங்கங்கள் என 4,716 அமைப்புகள் மற்றும் அவற்றின் கிளைகள் என சுமார் 5,000-க்கும் மேற்பட்ட கூட்டுறவு அமைப்புகள் மூலம் நகைக்கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் விவசாயிகள், நெசவாளர்கள், சிறுதொழில் செய்வோருக்கு உறுதுணையாக இருப்பது கூட்டுறவு வங்கிகள்தான். ஆனால் எந்த அடிப்படையில் நகைக் கடன்களை நிறுத்தி வைக்கும்படி தமிழக அரசின் சார்பில் அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் குறுஞ்செய்தி மூலம் ஆணையிட்டுள்ளார் என தெரியவில்லை. தமிழக முதல்வர் நகைக்கடன்கள் எதுவும் நிறுத்திவைக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் நாங்கள் இப்போது கூட்டுறவு சங்க நிர்வாகிகளிடம் விசாரித்தபோது ஒவ்வொரு கூட்டுறவு வங்கியும், அதன் நிதிநிலைக்கு தக்கவாறுதான் நகைக்கடன்களை வழங்கவேண்டும் என்று அரசு தரப்பில் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. ஆனால் இதுபோன்ற தெளிவற்ற உத்தரவுகளை அரசு கொடுத்தால், நிச்சயமாக கூட்டுறவு சங்கங்கள் பயனாளிகளுக்கு நகைக்கடன் வழங்காது. இப்போதுதான் விவசாயிகள் அனைவரும் பயிர் சாகுபடி செய்ய ஆரம்பித்துள்ளனர், எனவே இந்த நேரத்தில்தான் அவர்களுக்கு நகைக்கடன் அவசியம். எனவே அரசு அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் எந்த நிபந்தனைகளும் இன்றி உடனடியாக நகைக்கடன் வழங்க உத்தரவிட வேண்டும்” என்கிறார்
இதுபற்றி பேசும் அதிமுக செய்தி தொடர்பாளர் சசிரேகா “ கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளவர்கள், இந்த கொரோனா நெருக்கடி காலத்தில் டெபாசிட் தொகையை திரும்பப் பெற விரும்புகின்றனர். எனவே அந்தந்த கூட்டுறவு வங்கிகளின் நிதிநிலைக்கு ஏற்றவாறு நகைக்கடன் வழங்கவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் நகைக்கடன் வழங்குவது ரத்து செய்யப்படவில்லை” என்கிறார்
குழப்பத்திற்கு காரணம் என்ன?
இப்போது ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு காரணம் அனைத்து நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகள், மாநிலக் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையில் கொண்டுவரும் வங்கிகள் ஒழுங்குமுறை திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து அவசரச் சட்டம் பிறப்பித்ததுதான். விவசாயிகள் மற்றும் சிறுதொழில் செய்வோரின் நலனை உயர்த்துவதற்காகவும், பாதுகாப்பதற்காகவும் உருவாக்கப்பட்டதுதான் கூட்டுறவு வங்கிகள். இப்போதைய அவசரச் சட்டம் என்பது அந்த நோக்கத்தையே சிதைக்கும் வகையில் உள்ளது என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச்செயலாளர் சி.மகேந்திரன் “ கடன் கொள்கைகளைத் திட்டமிடுவதையும், விவசாயிகளுக்கு உரிய காலத்தில் வட்டிச் சலுகையுடன் கடன் வழங்குவதையும் தமிழகத்திலுள்ள கூட்டுறவு வங்கிகள் திறம்பட செய்து வருகின்றன. விவசாயிகளே திட்டமிட்டுச் செயல்படுத்தும் ஒரு ஜனநாயக அமைப்பாகவும் இக்கூட்டுறவு வங்கிகள் உள்ளன. அது மட்டுமல்லாமல் கிராமப்புற பொருளாதாரத்தையும் இது வெகுவாக ஊக்குவிக்கிறது. சிலநேரங்களில் இயற்கைச் சீற்றங்களால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருவாய் இழப்பு ஏற்படுமேயானால் கடன் குறித்த நிவாரணத்தை மாநில அரசுகளே ஏற்றுக் கொள்கின்றன. இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் உறுதிசெய்யப்படுகிறது. கூட்டுறவு சங்கங்களையும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தால் இதுவும் சாதாரணமான ஒரு வங்கியாக மாற்றப்படும். இதனால் வேளாண்மை, கைத்தறி போன்ற சிறுதொழில் செய்வோர் கூட்டுறவு வங்கிகளை அணுகமுடியாத சூழல் உருவாகும்.
மாநிலத்தின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதன் மூலம் மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படுவதுடன் கிராமப் பொருளாதார வளர்ச்சியும் முற்றிலும் முடங்கும் . வங்கிகளில் பன்னாட்டு முதலீடுகளுக்கு அரசு அனுமதி வழங்கி உள்ள நிலையில், அதன் மூலம் பெரும் முதலாளிகளிடம் விவசாயிகளை அடிமைப்படுத்தும் திட்டம் இதன் பின்னணியில் இருக்கிறதோ என்ற அச்சமும் இப்போது எழுகிறது. இதன் தொடர்ச்சிதான் இப்போது எழுந்திருக்கும் நகைக்கடன் தொடர்பான குழப்பங்கள்” என்கிறார் உறுதியுடன்
கூட்டுறவு வங்கிகள் வலுப்பெறும்:
கூட்டுறவு வங்கிகள் வலுப்பெறவே இந்த சட்டத்திருத்தம் என்கிறார் பாஜகவின் மாநில துணைத்தலைவர் வானதி சீனிவாசன் “கூட்டுறவு வங்கிகள் குஜராத்திலும், மஹாராஸ்டிராவிலும் அதிகமாக உள்ளது. அதுபோல நாடு முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற கூட்டுறவு வங்கிகளும், நூற்றுக்கணக்கான மல்டிஸ்டேட் கூட்டுறவு வங்கிகளும் உள்ளன. இந்த கூட்டுறவு வங்கிகளில் நடுத்தர மக்களும், ஏழை, எளிய மக்களும் அதிகளவில் பயன்பெற்றுவருகின்றனர். கடந்த ஆண்டு சில மாநிலங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் இருந்த சேமிப்பினை அதன் உறுப்பினர்களுக்கு வழங்கமுடியாத காரணத்தால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதுபோன்ற முறைகேடுகளை களைவதற்காகவே இந்த அவசரச் சட்டம் இப்போது இயற்றப்பட்டுள்ளது. மக்கள் பாதிக்கப்படக்கூடாது, மக்களின் பணம் பாதுகாக்கப்படவேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்தச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் எட்டுகோடி மக்கள் பலன்பெற இருக்கிறார்கள். ஆறு லட்சம் கோடி ரூபாய் சேமிப்புதொகை பாதுகாப்பாக இருக்கும்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளைபோலவே ஒரே மாதிரியான சிறப்பான சேவை கிடைப்பதற்கு இந்தச் சட்டத்திருத்தம் வழிசெய்யும். நமது அரசியலமைப்பு சட்டத்தின்படி நிதி என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. கூட்டுறவு வங்கிகள் என்பது நிதி தொடர்பான பணிகளுக்காகவே உருவாக்கப்பட்டது. எனவே கூட்டுறவு வங்கிகளை முறைப்படுத்தவே இந்தச் சட்டத்திருத்தம் உருவாக்கப்பட்டுள்ளது. மற்றபடி மாநில அரசின் உரிமைகள் எந்த இடத்திலும் பறிக்கப்படவில்லை.
இதுவரைக்கும் கூட்டுறவு சங்கங்களில் கடன் தள்ளுபடி செய்யும்போது விவசாயிகளின் கடனை மாநில அரசு ஏற்றுக்கொண்டு அந்த தொகையை கூட்டுறவு வங்கிகளிடம் செலுத்தும். அதனால் இனிமேலும் மாநில அரசு விவசாயிகள், வேளாண்மை, சிறுதொழில் கூட்டுறவு வங்களில் உள்ள கடனை ஏற்றுக்கொண்டு செலுத்தினால் அதற்கு ரிசர்வ் வங்கி எந்த தடையும் சொல்லப்போவதில்லை. இப்போது செய்யப்பட்டுள்ள சட்டத்திருத்தத்தால் கூட்டுறவு சங்கங்களின் சேமிப்புத்தொகை பாதுகாக்கப்படுவதுடன், அந்த வங்கிகள் வலுப்படவும் வழிவகுக்கும்” என்கிறார்.