6 மணிநேரம் மட்டுமே இலவச மின்சாரம், விவசாயிகளுக்கு தமிழக அரசின் துரோகம்: துரைமுருகன்

6 மணிநேரம் மட்டுமே இலவச மின்சாரம், விவசாயிகளுக்கு தமிழக அரசின் துரோகம்: துரைமுருகன்

6 மணிநேரம் மட்டுமே இலவச மின்சாரம், விவசாயிகளுக்கு தமிழக அரசின் துரோகம்: துரைமுருகன்
Published on

பகலில் 6 மணிநேரம் மட்டுமே இலவச மின்சாரம் விநியோகிக்கப்படும் என்ற அறிவிப்பு, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யப்படுவதற்கு முன் நடத்தப்படும் பரிசோதனை ஓட்டமா? என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கேள்வியெழுப்பிள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இலவச மின்சாரம் பகலில் 6 மணி நேரம் மட்டுமே விநியோகிக்கப்படும்” என்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் மூலம் அ.தி.மு.க. அரசு  விவசாயிகளுக்கு அடுத்த கட்ட துரோகத்தைச் செய்திருக்கிறது. விவசாயிகளுக்கு விரோதமான இந்த அறிவிப்புக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். “15140 மெகாவாட் கூடுதல் மின்சாரம் மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது”,  “ஜூன் 2015ல் இருந்து அனைத்து வகை மின் நுகர்வோர்களுக்கும் 24X7 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது” –  இவை எல்லாம் எல்லாம் அ.தி.மு.க. அரசின் 2020-2021 ஆம் ஆண்டிற்கான எரிசக்தித்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் இடம்பெற்றுள்ளவை! சட்டமன்றத்தில் வைக்கப்பட்டவை! ஆனால் வழக்கம் போல் சட்டமன்றத்தில் ஒரு வாக்குறுதியும் - வெளியில் வேறு விதமாகவும் செயல்படும் அ.தி.மு.க. அரசு- விவசாயிகள் விஷயத்திலும் இரட்டை வேடம் போடுவதும்-  விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம் கொடுக்க மறுப்பதும் மிகுந்த வேதனையாக இருக்கிறது.

சராசரி மின் தேவை 14500 மெகாவாட் முதல் 15500 மெகாவாட்தான்” என்றும்- அதில் “21 சதவீத தேவை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரம் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது” என்றும் தமிழகச் சட்டமன்றத்தில் சொன்ன மின்துறை அமைச்சர் திரு. தங்கமணி, இப்போது விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய மின்சாரத்தில் கை வைத்திருக்கிறார்.  தான் பேசியதற்கு எதிராகவே தற்போது நடந்து கொண்டிருக்கிறார். அதற்கு “விவசாயி” என்று ஊர் ஊராக போஸ்டர் ஒட்டி மட்டுமே விளம்பரம் செய்து கொள்வதில் பிஸியாக இருக்கும்  முதலமைச்சர் திரு. பழனிசாமி  துணையும் போகிறார். “உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசி” விவசாயிகளின் நலனில் அ.தி.மு.க. அரசு அபாயகரமான விளையாட்டு நடத்துகிறது. வடகிழக்குப் பருவ மழை பெய்கிறது. பல்வேறு அணைகள் நிரம்புகின்றன. இந்தச் சூழலில் நீர் மின் திட்டங்கள் வாயிலாகக் கிடைக்கும் மின்சாரத்தின் அளவும் குறைவதற்கு வாய்ப்பில்லை. ஆனாலும் விவசாயிகளுக்குத் தேவைப்படும் இலவச மின்சாரத்திற்குப் பற்றாக்குறை என்ற தோற்றத்தை அமைச்சரும், முதலமைச்சரும் உருவாக்குவது ஏன்? பகலில் 6 மணி நேரம் மட்டும் இலவச மின்சாரம் வழங்குவது என்று முடிவு எடுப்பது ஏன்? இந்த மின் விநியோகம்  எப்படி விவசாயிகளுக்கு போதுமானதாக இருக்கும்?

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தொடங்கிய மின் திட்டங்கள் வாயிலாகக் கிடைக்கும் மின்சாரத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு “எங்கள் ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாகி விட்டது” என்று “வீராப்பு” பேசும் அமைச்சரும், முதலமைச்சரும் அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட புதிய மின்திட்டங்கள் எத்தனை என்று பட்டியலிட முடியுமா?  ஒரு புதிய மின் திட்டத்தையும் காட்ட முடியாது. ஏன்- அவர்கள் பாணியில் சொல்வதென்றால் - அ.தி.மு.க. அரசின் "மூளையில்” உதித்த புதிய மின் திட்டமும் இல்லை! ஒரு யூனிட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யப்படவுமில்லை! தற்போது பணிகள் நிலுவையில் உள்ள பல்வேறு மின் திட்டங்களும் தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்டவைதான்! அதில் கூட உடன்குடி அனல் மின் திட்டத்தை முதலில் ரத்து செய்தார்கள். பிறகு திரும்பவும் கொடுத்தார்கள்.  சட்டமன்றத்தில் நான் கேள்வி எழுப்பிய போது- அதை நிறைவேற்றுகிறோம் என்றார்கள். ஆனால் இன்றுவரை கழக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட உடன்குடி அனல் மின்நிலையத் திட்டத்தை நிறைவேற்றி முடிக்க அ.தி.மு.க. ஆட்சிக்குத் திறமையில்லை! கழக ஆட்சியில் அறிவித்த திட்டங்களை எல்லாம் நிறைவேற்றியிருந்தால் கூட- இந்நேரம் தமிழ்நாடு இந்தியாவிற்கே மின்சார உற்பத்தியில் வழிகாட்டியாக இருந்திருக்கும்!

ஏற்கனவே இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் நோக்கில் அறிவிக்கப்பட்ட உதய் மின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது போல் “பாவ்லா” காட்டி விட்டு பிறகு ஆதரவளித்துச் செயல்படுத்தியது அ.தி.மு.க. அரசு. இப்போதும் கூட இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் எண்ணத்துடன் நிறைவேற்றத் துடிக்கும் 2020 ஆம் ஆண்டு மின்சாரச் சட்டத் திருத்தத்திற்கும் மறைமுக ஆதரவு வழங்கி,  மத்திய பா.ஜ.க. அரசுடன் கைகோர்த்து நிற்கிறார் முதலமைச்சர் திரு. பழனிசாமி.

இந்நிலையில்  “பகலில் 6 மணி நேரம் மட்டுமே ” இலவச மின்சாரம் என்ற அறிவிப்பு விவசாயிகளுக்கு எவ்வித பலனும் அளிக்காது. ஒரு விவசாயிக்குக் குறைந்தபட்சம் 18 முதல் 20 மணி நேரம் மின்விநியோகம் இருந்தால்தான் வேளாண்மை செய்ய முடியும் என்ற நிலையில்- இந்த அறிவிப்பு  விவசாயிகளுக்கு விரோதமானது. அது மட்டுமின்றி, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தையே ரத்து செய்வதற்கு முன் நடத்தப்படும்  “பரிசோதனை ஓட்டமா?” என்றும் சந்தேகம் எழுகிறது.  ஆகவே தயவு செய்து விவசாயிகளின் வாழ்க்கையுடன் விளையாடாதீர்கள். வியர்வை சிந்தும் விவசாயிகள் மனதில் வேலைப் பாய்ச்சாதீர்கள்.  நடைமுறைக்கு ஒத்து வராத  இந்த அறிவிப்பை உடனடியாகக் கைவிட்டு- 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு  இலவச மின்சாரம் வழங்கிட வேண்டும் என்றும் - அது இயலவில்லை என்றால் குறைந்தபட்சம் 20 மணி நேரமாவது விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் விநியோகித்திட வேண்டும் என்றும் முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com