‘கிசான் பள்ளி’: டெல்லி விவசாய போராட்ட களத்தில் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புதிய பள்ளி!
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் பகுதியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்காக பள்ளிக்கூடத்தை நிறுவியுள்ளனர் விவசாய போராட்ட ஆதரவு தன்னார்வலர்கள்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து காலவரையின்றி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்திய விவசாயிகள். தலைநகர் டெல்லியின் எல்லை பகுதியில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டிக்கிரி எல்லை பகுதியில் அமைந்துள்ள விவசாயிகளின் போராட்ட களத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்காக பள்ளிக்கூடத்தை நிறுவியுள்ளனர் விவசாய போராட்டத்தை ஆதரித்து வரும் செயற்பாட்டாளர்கள்.
இந்த பகுதிக்கு அருகாமையில் வசித்து வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்காக ‘கிசான் பள்ளி’ நிறுவப்பட்டுள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களான ஹரியானா பகுதியை சேர்ந்த இருவரும், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தை சார்ந்த தலா ஒரு ஆசிரியர்களும் மாணவர்களுக்கு கல்வி போதித்து வருகின்றனர்.
ஹிந்தி, ஆங்கிலம், கணக்கு, அறிவியல் பாடங்கள் இங்கு போதிக்க படுகிறது. சுமார் 40 மாணவர்கள் அதன் மூலம் பயன் பெற்று வருகின்றனர். மாலை 4 முதல் 6 மணி வரை இந்த பள்ளி இயங்கி வருகிறது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகள் போராட்ட களத்திற்கு வந்து விளையாடுவது வழக்கம். அவர்களிடத்தில் விவசாயிகள் பேசியதன் மூலம் பள்ளிக்கூடத்திற்கு அவர்கள் செல்லாமல் இருப்பதை அறிந்து கொண்டுள்ளனர். அதன் விளைவாக இந்த பள்ளிக்கூடம் நிறுவப்பட்டுள்ளது. இப்போதைக்கு இந்த போராட்டம் முடிய போவதில்லை என்பதால் பள்ளியை நிறுவி உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்த பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் ஆசிரியர்கள் கடந்த நவம்பர் முதலே போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் : TRIBUNE INDIA