“விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாறவேண்டும்” - தோட்டக்கலைத் துறை அதிகாரிகள்
இயற்கை விவசாயத்திற்கு அரசு பல்வேறு மானியங்களையும் உதவிகளையும் வழங்கி வருவதால், விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும் என தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் வலியுறுத்தினர்.
தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் 6 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஓராண்டு கால பயிரான மரவள்ளி தற்போது சாகுபடி செய்யப்பட்டு, ஆறு மாத காலம் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் மரவள்ளி கிழங்கு செடிகளை முழுவதும் செம்பேன் வெள்ளை பூஞ்சை போன்ற நோய்கள் தாக்கி வருகிறது.
இதனால் செடிகள் வளராமல் அழுகும் நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு இந்த வெள்ளை பூஞ்சை நோய் பரவி, சாகுபடி செய்துள்ள மொத்த பயிர்களையும் அழித்து வருகிறது. இதனால் மரவள்ளி சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழல் இருந்து வருகிறது. இதனையடுத்து விவசாயிகள் தோட்டக்கலைத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குனர் ஜி.மாலினி மற்றும் அரூர் வட்டார உதவி இயக்குனர் எஸ்.ராஜேஸ் கண்ணன் உள்ளிட்டோர் அடங்கிய தோட்டக்கலைத் துறையினர், வச்சாத்தி, அச்சல்வாடி, கூடலூர் பகுதிகளில் மரவள்ளி சாகுபடி செய்துள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து மரவள்ளி செடியில் தாக்கியுள்ள வெள்ளை பூஞ்சைகளை வளராமல் தடுப்பதற்கு, பூஞ்சை தாங்கியுள்ள பகுதிகளை உடைத்து விட்டு, மருந்து தெளிக்க வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுரைகளை வழங்கினர். தொடர்ந்து மருந்து தெளிப்பதற்கு தேவையான வழிகாட்டு முறைகள் அடங்கிய துண்டறிக்கையை விவசாயிகளுக்கு வழங்கினர்.
மேலும் “தமிழக அரசு இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறது. இதில், விவசாயிகளுக்கு தேவையான இடு பொருட்கள் உள்ளிட்ட உதவிகளை, மானியத்தில் அரசு வழங்கி இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வருகிறது. எனவே விவசாயிகள் ரசாயனங்களை தவிர்த்து, முழுமையாக இயற்கை விவசாயம் செய்வதற்கு ஆர்வம் காட்ட வேண்டும், முன்வர வேண்டும்” என தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.