
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள், தலைநகர் டெல்லி எல்லையில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் ஓராண்டு காலத்தை இந்த போராட்டம் நெருங்கியுள்ளது. இந்நிலையில் நொய்டாவை சேர்ந்த மோனிக்கா அகர்வால் “தினசரி போக்குவரத்துக்கு இடையூறு கொடுக்கும் விதமாக டெல்லியின் எல்லைப் பகுதியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் அமைந்துள்ளது. ஆகையால் சாலையை மறித்து போராடி வருபவர்களை அப்புறப்படுத்த வேண்டும்” என நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார்.
அவரது மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு, “இந்த சிக்கலுக்கு ஒரு தீர்வு காண வேண்டியுள்ளது. போராடுவது விவசாயிகளின் உரிமை. அதை நாங்கள் கூடாது என சொல்லவில்லை. ஆனால் அதற்காக சாலையை மறிக்கக்கூடாது. மக்களுக்கு சாலையில் செல்வதற்கான உரிமை உள்ளது. அதனால் தான் இது கூடாது என்கிறோம்.
விவசாயிகளின் பிரச்னையை தீர்ப்பது நீதிமன்றமோ, போராட்டமோ அல்லது நாடாளுமன்ற விவாதமாக கூட இருக்கலாம். ஆனால் தேசிய நெடுஞ்சாலையை மறிப்பது தொடர்கதையாகி உள்ளது. இதற்கு முடிவே கிடையாதா?” என இதனை தெரிவித்துள்ளனர்.