இரவு நேரத்தில் தடையின்றி மும்முனை மின்சாரம் : விவசாயிகள் கோரிக்கை

இரவு நேரத்தில் தடையின்றி மும்முனை மின்சாரம் : விவசாயிகள் கோரிக்கை
இரவு நேரத்தில் தடையின்றி மும்முனை மின்சாரம் : விவசாயிகள் கோரிக்கை

சீர்காழி அருகே அறிவிக்கபடாத மின் தடையால் 700 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல் மற்றும் பருத்தி சாகுபடி பாதிப்பை தடுக்க இரவு நேரத்தில் மட்டுமாவது தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த ராதாநல்லூர் ஊராட்சியில் 1000 க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி விவசாயிகள் 700 ஏக்கரில் கோடை சாகுபடியாக நெல் மற்றும் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். மோட்டார் மூலம் நிலத்தடி நீரை எடுத்து சாகுபடி பணிகளை மேற்கொள்ளும் இவர்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

தேர்தலுக்கு முன்பு வரை 24 மணி நேரமும் வழங்கப்பட்டு வந்த மும்முனை மின்சாரம் பின்னர் படிபடியாக குறைக்கபட்டு, தற்போது நாள் ஒன்றுக்கு 2 முதல் 4 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது என குற்றம் சாட்டுகின்றனர். அதுவும் எந்த நேரத்தில் கொடுக்கப்படும் என தெரியாத சூழல் உருவாகியுள்ளதால், விவசாயிகள் பெரும் சிரமத்திற்குள்ளாவதாக கூறுகின்றனர். இதனால் ராதாநல்லூர் ஊராட்சியில் கோடை விவசாயத்தை தொடர முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சாகுபடிக்கான நாற்றுகள் தயார் நிலையில் இருந்தும் தண்ணீர் இல்லாததால் பலர் நடவு செய்ய தவிக்கின்றனர். இதனால் நாற்று முற்றி கருகி வருகிறது என வேதனை தெரிவிக்கின்றனர். அறிவிக்கப்படாத மின் தடையால் கிராமமக்களும் விவசாயம் பாதிக்கப்படுவதையும் தடுக்க இரவு நேரத்தில் மட்டுமாவது தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க, மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகளும் கிராம மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com