மழை பெய்யும் என்று பொய்... வானிலை ஆய்வு மையம் மீது விவசாயிகள் புகார்
மழை பெய்யும் என்ற தவறாக வானிலை முன்னறிவிப்பு செய்து லட்சக்கணக்கான ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக வானிலை ஆய்வு மையத்தின் மீது மகராஷ்ட்ரா விவசாயிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
பீட் மாவட்டத்தின் தின்ட்ரூட் காவல்நிலையத்தில் விவசாயிகள் அளித்துள்ள புகாரில், புனே மற்றும் கோலாபா ஆகிய பகுதிகளில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையங்கள் உற்பத்தியாளர்களுடன் கைகோர்த்துக்கொண்டு விவசாயிகளுக்கு தவறான வானிலை முன்னறிவிப்பைச் செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளனர். வானிலை முன்னறிவிப்பை நம்பி விதைப்பு நடவடிககைகளை மேற்கொண்டதால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டதாகக் கூறியுள்ள விவசாயிகள், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த ஜூன் மாதத்தின் காரீஃப் பருவத்தின் போது நல்ல மழைப்பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியதைக் கேட்டு விதைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதால், விவசாயிகளுக்கு கடுமையான இழப்பு ஏற்பட்டதாகக் கூறுகிறார் கங்காபிஷான் தவாரே எனும் விவசாயி கூறுகிறார். கடும் வறட்சி நிலவிவந்த நிலையில் வானிலை ஆய்வுமையத்தின் முன்னறிவிப்பை நம்பி விதைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், அந்த விதைகள் எதுவும் முளைக்காமல் நஷ்டமடைந்ததாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். நாட்டிலேயே அதிக வறட்சி நிலவும் பகுதிகளில் ஒன்றாக அறியப்படும் மகராஷ்ட்ராவின் மாரத்வாடா பகுதியில் விவசாயிகள் தற்கொலை செய்யும் நிகழ்வு வாடிக்கையான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.