நெல் கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம்... மழையில் வீணாவதால் விவசாயிகள் வருத்தம்

நெல் கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம்... மழையில் வீணாவதால் விவசாயிகள் வருத்தம்
நெல் கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம்... மழையில் வீணாவதால் விவசாயிகள் வருத்தம்

அரசு நெல்கொள்முதல் நிலையத்தில் 10 நாட்களுக்கும் மேலாக நெல்லை கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால் மழையில் நனைந்து நெல்மூட்டைகள் சேதமடைவதைக் கண்ட விவசாயிகள் வேதனையுடன் காத்திருக்கின்றனர்.

திருச்சி மணிகண்டம் பகுதியில் உள்ள தனியார் இடத்தில் அரசு நெல்கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மணிகண்டம், புங்கனூர், மேக்குடி, பாகனூர், அரசங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தனியாரிடம் குறைந்தவிலைக்கு விற்பனை செய்ய மனமின்றி சொற்ப லாபத்திற்காக தாங்கள் விளைவித்த நெல்லை இங்கு கொண்டுவந்துள்ளனர்.

சுமார் 10-15 நாட்களுக்கு மேலாக நெல்லை கொட்டிவைத்து விற்பனை செய்வதற்காக காத்திருக்கும் விவசாயிகளிடம் குடோனில் இறக்குவதற்கு இடமில்லையென்றும், லாரிகள் குடோனில் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக காரணத்தைக் கூறி நெல்லை கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் காலம் தாழ்த்திவருகின்றனர். இதனால் நேற்று மட்டுமன்றி அவ்வப்போது பெய்துவரும் மழையால் கொட்டப்பட்டுள்ள நெல் அனைத்தும் மழையில் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், 5 நாட்கள் காத்திருந்து 4 ஆயிரம் செலவுசெய்து மீண்டும் அந்த நெல்லை காயவைத்து விற்பனை செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளின் கூறுகின்றனர்.

எனவே நெல்லை விரைந்து கொள்முதல் செய்திட நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறும் விவசாயிகள், பாதுகாப்பான முறையில் நெல்லைக் கொட்டி அதனை விற்பனை செய்ய ஏதுவாக நவீனமுறையில் அரசால் கொள்முதல் நிலையங்கள் ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர். விவசாயிகளை அரசும் மதிக்காததால் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் தற்போது குறுவைசாகுபடி பணிகளை மேற்கொள்ளாமல் இங்கேயே காத்திருப்பதாகவும், எதிர்காலத்தில் விவசாயத்தை செய்யலாமா வேண்டாமா என்ற நிலையில் இருப்பதாகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com