தெரிந்தவருக்கு வீட்டுப்பத்திரத்தை ஜாமினாக கொடுத்த விவசாயி - கடன் நெருக்கடியில் தற்கொலை ?

தெரிந்தவருக்கு வீட்டுப்பத்திரத்தை ஜாமினாக கொடுத்த விவசாயி - கடன் நெருக்கடியில் தற்கொலை ?
தெரிந்தவருக்கு வீட்டுப்பத்திரத்தை ஜாமினாக கொடுத்த விவசாயி - கடன் நெருக்கடியில் தற்கொலை ?

தஞ்சையில் வீட்டுப்பத்திரத்தைக் கடனுக்கு ஜாமினாக வழங்கிய விவசாயி பைனான்ஸ் நிறுவனத்தின் நெருக்கடியால் தற்கொலை செய்துகொண்டார் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ருத்திர சிந்தாமணி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (57). இவர் தனது சொந்த கிராமத்தில் விவசாயம் பார்த்து வந்தார். கடந்த 2012ஆம் ஆண்டு குலக்குடி கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் கடன் பெறுவதற்காக பெரியசாமி தனது வீட்டுப்பத்திரத்தை ஜாமினாக கொடுத்துள்ளார். அதனைக்கொண்டு மாரிமுத்து 8 லட்ச ரூபாய் கடனாகப் பெற்றார் எனத் தெரிகிறது. இதில் 4 லட்ச ரூபாயை முறையாக திருப்பி செலுத்திய மாரிமுத்து, மீதத்தொகையை செலுத்தாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

மாரிமுத்து கடனை செலுத்தாத காரணத்தால் கடன்கொடுத்த பைனான்ஸ் நிறுவனத்தினர் பெரியசாமிக்கு நெருக்கடி கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்தார் என அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் பெரியசாமியின் வீட்டை பைனான்ஸ் நிறுவனத்தினர் ஜப்தி செய்ய வந்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த பெரியசாமி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை உடனடியாக மீட்ட உறவினர்கள் பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, அவர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இருப்பினும், அங்கு சிகிச்சை பலனின்றி பெரியசாமி உயிரிழந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக தகவலறிந்த பெரியசாமியின் உறவினர்கள் பைனான்ஸ் நிறுவனம் மீதும், கடனை திரும்ப செலுத்தத்தவறிய மாரிமுத்து மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பெரியசாமியின் சடலத்தை வாங்க மறுத்ததால் மருத்துவமனை வளாகத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பைனான்ஸ் நிறுவனத்திடம் விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com