கடலூர்:  நிவர் புயலின் சீற்றம்.. வாழை, பன்னீர் கரும்பு பயிர்கள் நாசம்

கடலூர்:  நிவர் புயலின் சீற்றம்.. வாழை, பன்னீர் கரும்பு பயிர்கள் நாசம்
கடலூர்:  நிவர் புயலின் சீற்றம்.. வாழை, பன்னீர் கரும்பு பயிர்கள் நாசம்

கடலூர் மாவட்டத்தில் புயல் காரணமாக வாழை மற்றும் பன்னீர் கரும்பு சாகுபடி வேரோடு சாய்ந்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக பன்னீர் கரும்பு மற்றும் வாழை சாகுபடி அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட  பகுதிகளில் சுமார் 200 ஏக்கரில் பன்னீர் கரும்பு சாகுபடியும், சுமார் 500 ஏக்கரில் வாழை சாகுபடியும் செய்யப்பட்டுள்ள நிலையில் நிவர் புயல் காரணமாக சுமார் 50 ஏக்கர் பரப்பிலான பன்னீர் கரும்பு பயிர்களும் சுமார் 110 ஏக்கரிலான் வாழை பயிர்களும்  வேரோடு சாய்ந்து சேதமடைந்துள்ளது.

10 மாத கால பயிரான பன்னீர் கரும்பு சாகுபடி கடந்த மார்ச் மாதம் பயிரிடப்பட்ட நிலையில் வரும் தைப்பொங்கலுக்கு அறுவடை செய்யப்பட இருந்தது. இந்நிலையில் சேதம் அடைந்துள்ளதால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

நடவு, உரம், பராமரிப்பு உள்ளிட்ட செலவுகள் என இதுவரை ஏக்கருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதாக கூறுகின்றனர் விவசாயிகள். அறுவடைக்கு இன்னும் ஒன்றரை மாதங்களே உள்ள நிலையில் கரும்பு பயிர்கள் சாய்ந்துள்ளதால் எந்த பயனும் இல்லை எனவும் சாய்ந்த கரும்புகளை நிமிர்த்தவோ அல்லது  வெட்டி விற்பனை செய்யவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என கவலை தெரிவித்துள்ளனர்.

சாகுபடிக்காக பெற்ற கடன்களை எப்படி திருப்பி செலுத்துவது என தெரியாமல் திகைத்து வரும் விவசாயிகள், வேளாண் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  

இதேபோல் வாழை பயிர்களும் அறுவடைக்கு தயாரான நிலையில் சாய்ந்து சேதமடைந்துள்ளதால் ஏக்கருக்கு 60 முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வாழை விவசாயிகள் கூறுகின்றனர்.

வங்கிகளில் பெற்றுள்ள கடன் தொகையினை எவ்வாறு திருப்பி செலுத்துவது என தெரியாமல் திகைத்துள்ள நிலையில் அடுத்தகட்ட விவசாய பணிகளை துவங்க  சாய்ந்துள்ள மரங்களை அப்புறப்படுத்தி இடங்களை சுத்தம் செய்ய ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஏற்படும் என்பதால் அடுத்த கட்ட விவசாயத்தை துவங்குவதற்கான நிவாரண உதவிகளையாவது அரசு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  மேலும் காப்பீடு செய்வது தொடர்பாக வேளாண்துறை அதிகாரிகள் எந்தவித அறிவுறுத்தலும் வழங்கவில்லை எனவும் குற்றம்சாட்டுகின்றனர் விவசாயிகள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com