மேட்டூர் அணை திறப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் விவசாயிகள்
சம்பா சாகுபடிக்கு உகந்த நெல் ரகங்களை தேர்வு செய்ய, மேட்டூர் அணை திறக்கும் தேதியை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மன்னார்குடி, திருவாரூர் சம்பா சாகுபடியைப் பொறுத்தவரை அக்டோபர் 20ஆம் தேதிக்கு பிறகு தொடங்கவுள்ள வடகிழக்குப் பருவமழைக்குள் பயிரை நன்கு வளர்த்துவிட வேண்டும். அப்போதுதான் மழையை தாங்கி பயிர்கள் நிற்கும். தற்போது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதோடு, தொடர்ச்சியாக காவிரி டெல்டாவில் மழையும் பெய்து வருகிறது. இந்த சூழல் விவசாயிகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தமிழக அரசு மேட்டூர் அணையின் நீர் திறப்பு தேதியை அறிவிப்பது குறித்தோ, டெல்டா விவசாயிகளுக்கு வழிகாட்டுதல்களையோ இதுவரை வழங்கவில்லை.
இதனால் 130 நாட்கள் வயதுடைய மத்திய கால ரகத்தை தேர்வு செய்வதா அல்லது 110 நாட்கள் வயதுடைய குறுகிய கால ரகங்களை தேர்வு செய்வதா என்பதை முடிவு செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். திருவாரூர், நாகை மாவட்ட ஆற்றுப்பகுதிகளில் நடைபெற்றுவரும் தடுப்பணை கட்டுமானப் பணிகளால் அணை திறப்பு தேதியை முடிவு செய்யாமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கட்டுமானப் பணிகளை விரைவு படுத்தும் நடவடிக்கைகளும் இல்லாததால் விவசாயிகளின் குழப்பம் அதிகரித்துள்ளது.