”ஆன்லைன் செயலியில் பணத்தை ஏமாற்றிவிட்டார்கள்” - கண்ணீர் விட்டு அழுத தேனி விவசாயி!

”ஆன்லைன் செயலியில் பணத்தை ஏமாற்றிவிட்டார்கள்” - கண்ணீர் விட்டு அழுத தேனி விவசாயி!
”ஆன்லைன் செயலியில் பணத்தை ஏமாற்றிவிட்டார்கள்” - கண்ணீர் விட்டு அழுத தேனி விவசாயி!

தேனியில் விவசாய செயலி மூலம் விளைபொருட்களை விலைக்கு வாங்கி விவசாயிகளிடம் மோசடி செய்த இருவர் தேனி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் கோட்டூர் அருகேயுள்ள தர்மாபுரி பசும்பொன் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் தங்கவேல் (55). விவசாயியான இவர் தன்னுடைய விளைநிலத்தில் நிலக்கடலை, எள், உளுந்து போன்றவற்றை விவசாயம் செய்து வருகிறார். "நித்ரா விவசாயம்" என்ற ஆன்லைன் செயலிமூலம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தன்னுடைய விளை பொருட்களை விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் தங்கவேலை தொலைபேசியில் தொடர்புகொண்ட நபர், தான் ஒரு வியாபாரி என்றும் விவசாய செயலியில் அவருடைய விளைபொருட்களை பார்த்ததாகவும், தன்னுடைய நிறுவனத்திற்கு விளைபொருட்களை அனுப்பி வைக்குமாறும், பொருட்கள் கிடைத்த பின்பு பணம் அனுப்புவதாகவும் கூறியுள்ளார்.

இதனை நம்பிய விவசாயி தங்கவேல் 96,700 ரூபாய் மதிப்புள்ள நிலக்கடலை, எள், உளுந்து ஆகியவற்றை கோயம்பத்தூர் செட்டிபாளையத்திற்கு பார்சல் சர்வீஸ் மூலம் அனுப்பி வைத்திருக்கிறார். விளைபொருட்கள் வழங்கியதற்கு 96 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை மறுதரப்பிலிருந்து தங்கவேலுக்கு அனுப்பியுள்ளனர். அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது வங்கிக்கணக்கில் பணம் இல்லை என்று கூறியுள்ளனர். பின்னர் தங்கவேல் விளைபொருட்களை வாங்கிய வியாபாரியை தொடர்பு கொண்டபோது அவரது மொபைல் எண் பயன்பாட்டில் இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது.

அப்போது தான் தங்கவேல் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்திருக்கிறார். இதையடுத்து தங்கவேல் தேனி சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்தார். தங்கவேல் அளித்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த சைபர் க்ரைம் போலீசார், விவசாயி தங்கவேலுக்கு தொடர்புகொண்ட மொபைல் எண்ணைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். அந்த தொடர்பு எண்ணை வைத்திருந்த கோவை குனியமுத்தூர் பகுதியில் இருந்து இருவரை கைதுசெய்து தேனி அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சேர்ந்த முகமது மாலிக் (54) மற்றும் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சேர்ந்த காஜா மைதீன் (44) ஆகிய இருவர் என தெரியவந்தது. இவர்கள் இருவரும் விளைபொருட்களை ஆன்லைனில் வாங்குவதற்கு என நிறுவனத்தை துவங்கி விவசாயியிடம் மோசடி செய்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து இரண்டு இருசக்கர வாகனங்கள், ஆறு செல்போன்கள் மற்றும் பத்திற்கு மேற்பட்ட சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட இருவரும் தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். விவசாயி தங்கவேலை போன்று வேறு விவசாயிகளிடம் இவர்கள் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டார்களா என்பது குறித்து இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com