பாசன பருவ சாகுபடி: அணைகளை திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
பாசன பருவ சாகுபடிக்காக பாபநாசம் உள்ளிட்ட 3 நீர்த்தேக்கங்களிலிருந்து வரும் 5ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு உள்ளிட்ட மூன்று நீர்த்தேங்களிலிருந்தும் பாசன பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “விவசாயிகளின் கோரிக்கை ஏற்று பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு ஆகிய மூன்று அணைகளிலிருந்தும் வரும் 5ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படும். இதனால் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 86,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து முதல்போக பாசனத்திற்காக வரும் 5ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளார். இதனால் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு லட்சத்து 43,747 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.