பாரத் பந்த்: விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் - திருச்சியில் 2,000 பேர் கைது!
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் திருச்சியில் இன்று நடந்த போராட்டத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தலைமையில் விவசாயிகள், தொழிலாளர்கள், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சியினரும், மக்கள் அதிகாரம், தொழிலாளர் முன்னேற்ற கழகம், இந்திய மாணவர்கள் சங்கத்தினர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் மட்டுமின்றி, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், சோமரசம்பேட்டை, புள்ளம்பாடி, லால்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 2,000-க்கும் மேற்பட்டோர் மாவட்டம் முழுவதும் கைது செய்யப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கூறும்போது, "வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறும் வரை எங்களின் போராட்டம் தொடரும். இதில் உள்ள பாதகங்களை உணர்ந்து, மத்திய அரசு இந்த சட்டங்களை திரும்பப் பெறவேண்டும். தமிழ்நாடு முதல்வர் தன்னுடைய 'சூழ்நிலை' காரணமாக இந்தச் சட்டங்களை ஆதரிக்கிறார்" என்றார்.