வேளாண் பட்ஜெட் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? ஏமாற்றமா? – விவசாயிகள் எண்ணம் என்ன?

வேளாண் பட்ஜெட் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? ஏமாற்றமா? – விவசாயிகள் எண்ணம் என்ன?
வேளாண் பட்ஜெட் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? ஏமாற்றமா?  – விவசாயிகள் எண்ணம் என்ன?

தமிழகத்தில் 2022-23ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகின.

இந்த பட்ஜெட்டின் சாதக, பாதகங்கள் குறித்து விவசாயிகளின் கருத்து என்னவென பார்ப்போம்….

ஏமாற்றம் தந்த பட்ஜெட்:

வேளாண் நிதிநிலை அறிக்கையினை குறித்து பேசிய காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை விமல்நாதன்,” தமிழக அரசின் இந்த வேளாண்மைக்கான நிதிநிலை அறிக்கையில்  எதிர்பார்த்த சில அம்சங்கள் நிறைவேறியுள்ளது. ஆனால், பல அம்சங்கள் நிறைவேறவில்லை என்பதே உண்மை. விவசாயிகள்  எதிர்பார்த்த அறிவிப்புகள் இடம் பெறாததால் இது ஏமாற்றம் அளிக்கக்கூடிய நிதிநிலை அறிக்கையை ஆகவே உள்ளது.



இந்த பட்ஜெட்டில் நெல் சாகுபடி பரப்பை 19 லட்சம் ஹெக்டேராக விரிவுபடுத்துவது என தெரிவிக்கப்பட்டுள்ளது, இது குறித்து தெளிவு படுத்த வேண்டும். அதே நேரத்தில் பருத்தி,துவரை மற்றும் சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்கும் சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளது  வரவேற்கத்தக்கவை. மேலும், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான தார்ப்பாய் வழங்குவது, சூரிய ஒளி மின்சக்தி பம்பு செட்டுகள் அமைப்பதற்கு 70 சதவீத மானியம் போன்ற அறிவிப்புகள் விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றுள்ள அறிவிப்புகள் ஆகும்.

ஆனால்,  திமுக தனது தேர்தல் அறிக்கையில் நெல்லுக்கு குவிண்டாலுக்கு 2,500 ரூபாயும் கரும்புக்கு குவிண்டாலுக்கு 4,000 ரூபாயும் தருவதாக அறிவித்தது ஆனால் அது குறித்த அறிவிப்பு எதுவும் இந்த பட்ஜெட்டில் இடம் பெறாதது விவசாயிகள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் சிறு, குறு விவசாயிகளின் நலன்கருதி கட்டண விவசாய மின் இணைப்பான பூந்தோட்ட மின் இணைப்பு எனப்படும் 3ஏ 1 மின் இணைப்பை இலவச மின் இணைப்பாக அறிவித்திட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம் அது குறித்தும் இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. நஞ்சில்லா வேளாண்மையை வலியுறுத்திய இயற்கை வேளாண் சந்தை நம்மாழ்வாருக்கு கல்லணை கரையில் மணிமண்டபம் அமைப்பது குறித்து கோரிக்கை வைத்திருந்தோம் அது குறித்த அறிவிப்பும் இல்லாதது உழவர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது  .

தெலுங்கானா,ஆந்திரா, ஒடிசா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் ஏக்கருக்கு 10,000 ரூபாய் ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படுகிறது. அதுபோல தமிழ்நாடு அரசும் ஊக்குவிப்புத் தொகை வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம், அதுவும் நிறைவேறவில்லை.

மேலும் தமிழகத்தில் மின் இணைப்புக்காக 3 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருக்கின்றனர் அவர்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கவும் அரசு ஆவண செய்ய வேண்டும் எனக்கூறியிருந்தோம். விவசாயிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான இந்த திட்டங்கள் இவை குறித்து மானிய கோரிக்கை விவாதத்தின் போது முதல்வர் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என உழவர்கள் காத்திருக்கிறோம்" என தெரிவித்தார்

பெரிய அளவில் ஏமாற்றங்கள் இல்லை:

பட்ஜெட் குறித்து பேசும் காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன், “ இந்த பட்ஜெட்டானது பெரிய அளவில் நமது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்றாலும், பெரிய அளவில் ஏமாற்றங்களும் இல்லை. ஏனென்றால் நிதி ஆதாரங்கள் இல்லாததால் ஒரேயடியாக அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய முடியாத போதிலும், படிப்படியாக நிறைவேற்றுவோம் என வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த பட்ஜெட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் 80 கோடி மதிப்பீட்டில் சுமார் 5 ஆயிரம் கிலோமீட்டர் தூர்வாரும் பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல சிறுதானியங்கள், துவரை சாகுபடியை ஊக்குவிக்க  சிறப்பு திட்ட மண்டலங்கள் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. வேளாண் படிப்புகள் படித்தவர்கள் அக்ரி கிளினிக் ஆரம்பிக்க ஒரு இலட்சம் நிதியுதவி செய்யப்படும் என அறிவித்துள்ளது, உழவர் சந்தையில் சிறுதானியங்கள் விற்பனை செய்ய வழிவகை செய்யப்படும் என்பதுபோன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.
நெல், கரும்பு, தோட்டக்கலை பயிர்கள் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளுக்குமே குறிப்பிடத்தக்க எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அடிப்படையான பணிகளை செய்த பட்ஜெட்டாகவே இது உள்ளது.

எங்களுக்கு பெரிய ஏமாற்றம் என்றால், நெல்லுக்கு  குவிண்டாலுக்கு 2500, கரும்புக்கு குவிண்டாலுக்கு 4000 ரூபாய் விலை வழங்கப்படும் என எதிர்பார்த்தோம். அடுத்ததாக 60 வயதை கடந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்த்தோம் அதுவும் நிறைவேறவில்லை. கடந்த ஆண்டைவிடவும் 750 கோடி ரூபாய் அளவுக்கு கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.” எனக்கூறுகிறார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com